Shadow

ஆதித்ய வர்மா விமர்சனம்

adithya-varma-review

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து, 2017 இல் வெளிவந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காய் வந்துள்ளது ஆதித்ய வர்மா.

விக்ரம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்துள்ள படமிது. விக்ரமிற்கு, ‘ப்ரேக்’ கொடுத்த படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’. ஒரு பிராமணப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கோபக்கார இளைஞனான சேதுவிற்கும் இப்படத்திற்கும் ஓர் ஒற்றுமையுண்டு. முக்கியமானதொரு வேற்றுமையும் உண்டு. அது, சேது படத்திலுள்ள நேட்டிவிட்டி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவன் தான் நாயகனென உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. முக்கியமாகப் படத்தின் முதற்பாதி ஒட்டாமல் மிக அந்நியமாக உள்ளது.

இரண்டாம் பாதியும் ஸ்லோவாகப் போனாலும், நாயகனின் வலியையும் காதலையும் தன் அநாயாசமான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். வசனங்களை மிகக் கவனமாகக் காது கொடுத்து கேட்டாலன்றி முழுவதுமாகப் புரியவில்லை. சட்டென கோபத்தில் வேற மொழிக்கு மாறி விடுகிறார் துருவ். கீழே தமிழில் சப்-டைட்டில் போடுகின்றனர். தமிழ்ப் படங்களையே சப்-டைட்டில் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பது கொஞ்சம் கடியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு, பனிதா சந்து மிகச் சுமாரான கதாநாயகி தேர்வு. படத்திற்கு ஓர் அந்நியத்தன்மையைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். பப்ளியான ஷாலினி பாண்டேவை அர்ஜுன் ரெட்டியில் பார்த்தவர்களுக்கு, மேலும் படம் அந்நியமாகத் தெரியும். இது துருவை மட்டுமே ப்ரோமோட் செய்யும் படமென்று ஆகிவிட்டதால், கதாநாயகனின் நண்பர்கள் தேர்வில் கொஞ்சம் அலட்சியம் காட்டியுள்ளனர்.

ஆதித்ய வர்மா இசை வெளியீட்டின் பொழுது, ‘இது அர்ஜுன் ரெட்டி போலிருக்காது. சில மாற்றங்கள் செய்துள்ளோம்’ என்றார் விக்ரம். ஆணாதிக்கத்தை ஹீரோயிசமானப் படம் காட்டுகிறது என்பதுதான் படத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு. அதைக் கொஞ்சமேனும் கலைந்திருப்பார்களோ அல்லது பூசி மெழுக முயற்சி செய்திருப்பார்களோ என சின்ன நப்பாசை எழுந்தது. ம்ஹூம்..!

விக்ரமின் குரலைப் பிரதியெடுத்தது போலுள்ளது துருவின் குரல். அவர் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க நடிப்பில் காட்டும் பாவங்களை, குரலிலும் காட்ட முயற்சி செய்யலாம். சாக்லேட் ஹீரோவிற்கு முரட்டுத்தனமான நபர் டப்பிங் கொடுத்தது போல் சில இடங்களில் நெருடுகிறது. A சான்றிதழ் பெற்ற இந்தப் படம், இளைஞர்களுக்கானது மட்டுமே! கண்டதும் காதல்; நாயகியின் சம்மதம் ஒரு பொருட்டில்லை என்ற மூர்க்கம்; கோபம் வந்தால் எவரையும் தூக்கியெறிவது; சமூகக் கட்டுப்பாடுகளைத் துச்சமென மதிக்கும் துக்கிரித்தனம் என படத்தின் நாயகன் மிகவும் பிரச்சனைக்குரியவன்.

மனிதர்கள் எவருமே ஒழுங்கில்லாத பொழுது, படத்தின் நாயகர்களிடம் மட்டும் அதை எதிர்பார்க்கும் தூய்மைவாதம் சரியா என்ற கருத்தாக்கத்தினை, இப்படியான விமர்சனங்கள் வைக்கும்பொழுது எதிர்கொள்ள நேரிடுகிறது. திரையில் தோன்றும் நாயகர்கள், இளம் பருவத்தினர் மனதில் மிகவும் தாக்கம் (influential) ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் குடிப்பது/புகைபிடிப்பது தவறு என்ற வாசகத்தைக் கட்டாயமாக்கியுள்ளது அரசு. ஒரு குறைந்தபட்ச பொறுப்புணர்வு படைப்பாளர்களுக்கே இருக்கவேண்டும். ஒரு பெண்ணை, taken for granted ஆக நடத்துவதை ஹீரோயிசமாக ப்ரொஜெக்ட் செய்வது மிக ஆபத்தானது. அதுதான் கதாநாயகனின் குணம் என்றானாலும், அதற்கான சுதந்திரம் படைப்பாளருக்கு உள்ளதெனினும், அப்படி ஒரு பெண்ணை நடத்தியதாலும், அடக்க முடியாத கோபத்தாலும், தன் காதலையும் வாழ்க்கையையும் இழந்த குற்றவுணர்வு அவனுக்குக் கடைசி ஃப்ரேம் வரை எழுவதே இல்லை. இயல்பு வாழ்க்கையில், மனிதனின் அன்றாடம் அவனது குற்றவுணர்வினிலே நகர்கின்றது.

க்ளைமேக்ஸில் மீண்டும், தன் தவறுகளை சரி பண்ணத் துடிப்பதாகக் காட்டப்படும் நாயகன், ‘கணவனை விட்டு வா?’ என்றுதான் எடுத்தவுடன் சொல்கிறானே தவிர, அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆதுரமாக ஒரு கேள்வி எழவில்லை நாயகனிடம். எது தவறென்றே தெரியாமல் ரெட்டி, சிங்காக மாறி, வர்மாவாகவும் வந்துவிட்டார்.