Shadow

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

karuppudurai-review

கோமாவில் உள்ள கருப்புதுரை எனும் முதியவரைத் தலைக்கு ஊத்திக் கொல்லப் பார்க்கின்றனர். கோமாவில் இருந்து எழும் கருப்புதுரை, பிள்ளைகளின் திட்டம் அறிந்து மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கோயிலின் பிரகாரத்தில் சந்திக்கும் குட்டி எனும் அனாதை சிறுவனுடனான நட்பு, ஆவர் வாழ்வில் புது வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிறுவனுக்கும், பெரியவருக்குமான அழகான நட்பின் பயணம்தான் படத்தின் கதை.

தலைக்கூத்தல் என்பதை கருணைக் கொலை (Euthansia) என்ற வகைமைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விருப்ப மரணத்தினைத்தான் அப்படிச் சொல்லமுடியும். இங்கு தமிழகத்தில் நிலவும் இப்பழக்கம், சுமை எனக் கருதும் பெரியவர்களை அகற்ற நடக்கும் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட கொலைகள். படத்தின் தொடக்கத்தில், ஓர் ஆவணம் போல் ‘தலைக்கூத்தல் அவசியமா? ஏன் அவசியம்?’ என்ற கேள்விகளை அணுகியுள்ளனர். அந்த ஆவணம் அதற்கு ஆதரவான குரலைத் தருவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அப்புள்ளியில் இருந்து விலகி அற்புதமான உறவுமுறைக்குள் படம் செல்கிறது.

தமிழ்ப் படங்களில் வரும் சிறுவனுக்கே உரிய வழக்கமான பெரிய மனித தோரணையைக் குட்டியாக நடித்த நாகவிஷாலுக்கும் கொடுத்துள்ளார் இயக்குநர் மதுமிதா. எனினும், ஜோக்கர் படத்தின் க்ளைமேக்ஸில் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசிய பேராசிரியர் மு.ராமசாமியின் இயல்பான நடிப்பு, இப்படத்தில் அச்சிறுவனின் அதிகபிரசங்கித்தனத்தைச் சமன் செய்து விடுகிறது. இருவருக்கும் இடையிலுள்ள நட்பு ரசிக்க வைக்கிறது. மனதிற்கு இதமாயும் உள்ளது. தமிழன்கள் புரியும் ஆக்ஷன் அட்டகாசத்தில் இருந்து கொஞ்சமாவது ஆசுவாசமடைய வந்துள்ள ஒரு ஃபீல் குட் படம். இத்திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

படம் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுதி இயக்கியுள்ள மதுமிதாவிற்குப் பாராட்டுக்கள். ரசிகர்களிடம் முடிவை விட்டுவிடும் வாய்ப்பிருந்தும் கர்மசிரத்தையாக சுபமாக முடித்துள்ளார். கோமாவில் இருக்கும் பொழுது, கருப்புதுரைக்கு தலைக்கூத்தல் சடங்கைச் செய்ய நினைத்ததைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதன் பின்னும் அத்தகைய யோசனை ஏன் அவர்களுக்கு எழுகிறது என்ற தெளிவு படத்தில் இல்லை.

தொரட்டி போன்றும், இப்படம் போன்றும், மனதிற்கும் வாழ்வியலுக்கும் நெருக்கமான சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரவேண்டும்.