ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை.
கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடுகிறது. அதைத் தட்டிக் கேட்கும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. இதனால் பதவி விலகிய ஒரு உதவி ஆணையரின் இடத்திற்குத் தான் நாம் வந்திருக்கிறோம் என்று புதிய உதவி ஆணையர் உணருகின்றார். அத்தருணத்தில், அவ்வூரில் புத்தகக்கடை நடத்திக் கொண்டே போதைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்ணும், இன்னும் சில பெரியவர்களும் வந்து தங்கள் ஊரை இந்த ‘கண்ணன் பாய்’ ஆளுகையில் இருந்து காப்பாற்றிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று முறுக்கிக் கொண்டு செல்லும் உதவி ஆணையர், கண்ணன் பாய் முன்பு முட்டி போட வைக்கப்படுகிறார்.
சீற்றம் கொண்ட சிங்கமாக இருக்கும் கண்ணன் பாய் மற்றும் அவனின் கே-டீம் இரண்டையும் சமாளிக்க நரியின் சூது தான் தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் உதவி ஆணையர் , பல வருடங்களாகக் காணாமல் போய் இருக்கும் கோதாவின் பழைய சிங்கமான ராஜுவை மீண்டும் கோதாவில் கொண்டு வந்து கண்ணன் பாய் தரப்புக்கு எதிராக நிறுத்த நரித்தனங்கள் செய்கிறார். நரித்தனங்கள் பலித்ததா, ராஜு வந்தானா, எதிர்த்து நின்றானா, கோதாவை மீட்டானா என்பது மீதிக் கதை.
ராஜுவாக துல்கர் சல்மான். கண்ணன் பாய்-ஆக டான்ஸிங் ரோஸ் சபீர் கல்லாரக்கல், மிகச் சிறப்பான தேர்வு. இருவரும் எதிர் எதிராக முறுக்கிக் கொண்டு நிற்கும் போது, உண்மையாகவே ஒரு கோதாவைப் பார்க்கின்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ராஜுவாக நடித்திருக்கும் துல்கர் சல்மானிற்கு ப்ளே பாயாக, ரெளடியாக, பாசமுள்ள தங்கையின் அண்ணனாக, பேசாமல் கோபம் காட்டும் அம்மாவின் மகனாக, தன் அப்பாவை எட்டி உதைத்த நண்பனை ஆதரிக்கும் நண்பனாக, தன் நண்பனை வெட்டிய அப்பாவை எதிர்த்து அடிக்கப் போகும் மகனாக, எத்தனை பேர் கையில் பொருளுடன் எதிர்த்து நின்றாலும் எதிரிட்டு நிற்கும் வீரனாக, காக்கிச் சட்டையின் கள்ளத்தனத்திற்கு ஏமாறாத அறிவாளியாக, காதலிக்காக ஊருக்குள் கஞ்சாவை ஒழிக்கும் காதலனாக, துரோகத்தாலும் ஏமாற்றத்தாலும் உடைந்து போகும் சாதாரண மனிதனாக பல்வேறு முகங்கள். அத்தனை முகங்களை அசால்ட்டாக மாறி மாறி அணிந்து கொண்டு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அதகளம் செய்கிறார்.
எதிராளி கண்ணன் பாயாக நடித்திருக்கும் ‘டான்ஸிங் ரோஸ்’ புகழ் சபீர் கல்லாரக்கல்லுக்கும் படத்தில் பல்வேறு முகங்கள். பாசமுள்ள நண்பனாக, பாசமுள்ள மகனாக, துரோகம் செய்யும் துரோகியாக, பணத்தாசையும் அதிகார போதையும் பிடித்து ஆட்டும் ஆடவனாக, பிறன் மனைவியைக் கவர்ந்து கொள்ளும் பேராசைக்காரனாக, பெற்ற தாயைத் தெருவில் விடும் தெருப்பொறுக்கியாக, நண்பனையே முதுகில் குத்த வலைவிரிக்கும் கயவனாக எத்தனையோ முகங்கள். அத்தனை முகங்களிலும் டான்ஸிங் ரோஸ் போலவே, அத்தனை நேர்த்தியாகவே பொருந்திப் போகிறார்.
குள்ளநரித்தனம் மிகுந்த உதவி ஆணையராக பிரசன்னா. மெச்சிக் கொள்ளும்படியான நடிப்பு. காதலி மற்றும் நாயகியாக வரும் ஐஸ்வர்ய லக்ஷ்மிக்குக் காதலில் உருகும் கதாபாத்திரம் என்றாலும், துல்கருக்கும் லக்ஷ்மிக்குமான காதல் சற்றே கரை புரண்ட காதல், கறைபட்ட இயல்பான காதல் என்று சொன்னாலும் தகும். மிரட்டலான வில்லனாக வந்து ஆங்காங்கே அவரே மிரண்டு பதுங்கும் கதாபாத்திரத்தில் செம்பியன் வினோத் ஜோஸ். பட்டையைக் கிளப்பியுள்ளார்.
இப்படத்தின் மிகப் பெரிய பலமே அசாத்தியமான கதாபாத்திர வடிவமைப்பும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான நெருடலான உறவுச் சிக்கல்களும் தான். ராஜுவும் லக்ஷ்மியும் ஈருடல் ஓருயிரான காதலர்கள் என்றாலும், லக்ஷ்மி ஒரு கட்டத்தில் தன்னை உதறி விட்டுச் செல்ல துணிந்தவள் என்பதை ராஜு அறிந்திருக்கிறான். இருப்பினும் அவளை முற்றாக உதற முடியாமல் தவிக்கிறான். அதே நிலை தான் லக்ஷ்மிக்கும், முரடனான ராஜுவுடனான உறவை முற்றிலும் முறிக்க மனமில்லை; மணமுடிப்பதிலும் முழுச் சம்மதமில்லாத நிலை.
தன் தந்தையைப் போலவே ரெளடியாக வேண்டும் என்று விரும்பி ரெளடியாக வளர்ந்து நிற்கும் ராஜுவிடம் அவன் தாய் பேசுவதே இல்லை. இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு சொல்லப்படாத உறவு இருக்கிறது. தன்னைப் போலவே ரெளடியாகப் போய்விட்டானே என்கின்ற மன உளைச்சலில், தந்தையும் ராஜுவிடம் பேசுவது இல்லை. ஆனால் அவர்களுக்குள்ளும் ஒரு பேரன்பு இருக்கிறது.
தன் மகனை வெட்டியவனின் மகன் தான் என்று தெரிந்தும் கண்னன் அம்மாவிற்கும் ராஜுவிற்கும் ஒரு அன்பான பற்று இருக்கிறது. தன் புதுப் பொண்டாட்டியின் சொல் கேட்டு தன்னைத் தெருவில் விட்டு விட்டுச் சென்ற கண்ணனை விட ராஜுவின் மீது கண்ணன் அம்மாவிற்குப் பேரன்பு இருக்கிறது. அதை விட அந்த முதிய வயதில் தள்ளாடும் வயோதிகத்தில் தன்னுடனே இருக்கும் தன்னையே அண்டி இருக்கும் பூனையின் மேல் அந்த வயதான தாய்க்குப் பேரன்பு இருக்கிறது. அது, எப்போதோ வந்து செல்லும் ராஜுவின் மேல் இருக்கும் அன்பைவிட மேலோங்கி எழுகிறது.
தன் காதலியின் அன்பிற்காக கஞ்சாவைத் தடுக்கும் ராஜுவிற்கும், தன் காதலியின் அதே அன்பிற்காக கஞ்சாவைப் புழக்கத்தில் விடத் துடிக்கும் கண்ணன் பாயிற்கும் இடையேயான நட்பானது புதிர்த்தன்மை நிறைந்தது. ‘நான் உன்னைக் கொன்றால் தான் என் மனைவி என்னோடு படுப்பேன் என்கிறாள்’ என்பதை கண்னண் ராஜுவிடம் சொல்லும் இடம் மிகுந்த நூதனமானது.
அது போல் கஞ்சாவைத் தடுக்கத் துடிக்கும் லக்ஷ்மிக்கும், கஞ்சாவைக் கொடுக்கத் துடிக்கும் கண்ணன் பாயின் மனைவிக்கும், பூனையை விட்டுத் தரத் தயாராக இல்லாத கண்னன் அம்மா கதாபாத்திரத்திற்கும் ஒரு நேர்க்கோட்டு அரசியல் பார்வை இருக்கிறது. இந்தப் பெண்களின் அரசியல் அவர்களுக்கு என்ன தேவையோ அதில் தெளிவாக மையம் கொள்வதில் இருக்கிறது.
டோனியாக வரும் சுரேஷ் கோபியின் புதல்வன் கோகுல் சுரேஷ் கதாபாத்திரமும் இது போன்ற நுட்பமான அரசியல் தன்மை கொண்டது. இரண்டு நண்பர்களான ராஜு மற்றும் கண்ணன் இவர்களில் யார் பக்கமும் சேராமல், தன் வேலையை காத்துக் கொள்ள மட்டுமே முனைவதில் அது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இப்படி, ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கவனம் ஈர்ப்பது இது போன்ற கதாபாத்திர வடிவமைப்பாலும், அந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண் நிறைந்த உறவுச் சிக்கல்களாலும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர்களின் அசாத்தியமான தத்ரூபமான நடிப்பினாலும் மாத்திரம் தான்.
முதல்பாதி முழுவதும் ராஜு கதாபாத்திரத்திற்கான முன் கதையிலேயே பெரும்பாலும் சென்றுவிடுகிறது. இருப்பினும் அந்த முதல்பாதி சுவாரசியம் நிறைந்ததாக இருந்தது உண்மை. ஆனால் இரண்டாம் பாதி தான் பார்வையாளர்களின் பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கிறது. ராஜுவிற்கும் கண்ணனுக்குமான ஆடுபுலி ஆட்டத்தில் டை-பிரேக்கர் மாதிரி மீண்டும் மீண்டும் நீண்டு கொண்டே சென்று எரிச்சலடைய வைக்கின்றது. இது போன்ற ஆக்ஷன் திரைப்படங்களுக்கு சண்டைக் காட்சிகள் மிக மிக முக்கியம். ஆனால் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் சாதாரண தரத்தில் தான் இருந்தது என்பது மற்றொரு ஏமாற்றம். ஜேக் பிஜோய், ஷான் ரகுமான் இருவரின் இசை மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு கோதாவின் ரத்தம் தோய்ந்த புழுதியை நம் கண் முன் நிறுத்துகிறது.
அபிலாஷ் என் சந்திரனின் எழுத்தில் பல இடங்களில் வசனங்கள் மின்னலென ஜொலிக்கின்றன. “தி க்ரேட் மேன் டேக் கிஸ் லவ் டூ கிஸ் கிரேவ்”, “எனக்குப் புடிச்சவனே நீ தானடா! உன் பேரை ஏன்டா சொல்லலை?” என ஆங்காங்கே மனதில் பச்செக்கன ஒட்டிக் கொள்கிறது.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையைச் சீர்ப்படுத்தி, நேரத்தைக் குறைத்து, காட்சிகளில் கொஞ்சம் வலு சேர்த்திருந்தால் கண்டிப்பாக ‘கிங் ஆஃப் கோதா’, தி ஒன் அண்ட் ஒன்லி கிங் என்று பேசப்பட்டிருக்கும்.
– இன்பராஜா ராஜலிங்கம்