Shadow

அகண்டா விமர்சனம்

அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும்.

படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu).

அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! தொடையைத் தட்டி ட்ரெயினைப் பின்னுக்கு அனுப்பும் விசேஷ சக்தி பல்லண்டத்திலேயே (Multiverse) இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிவன் கையிலுள்ள திரிசூலத்தில் கூட மூன்று பிளேடு (blade) தான் இருக்கும். அகண்டா கையிலிருப்பதோ ஐந்து பிளேடுகளுடன் ஐஞ்சூலமாய் இருக்கிறது.

படத்தின் பிரம்மாண்டத்திற்கு மிக முக்கிய காரணம், A.S.பிரகாஷின் கலை இயக்கமே. குகை வடிவமைப்பு, பிரம்மாண்ட சிவன் சிலை, ருத்திராட்சம் சுற்றப்பட்ட சிவலிங்கம், ஆசிரம செட்டப், சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் என கலை வடிவமைப்பை ரசித்துச் செய்துள்ளார். படத்தைத் தயாரித்த துவாரகா க்ரியேஷன்ஸின் லோகோவில் வரும் சக்கராயுதத்தையும் க்ளைமேஸ் சண்டையில் தேரின் சக்கரமாகக் கொண்டு வந்துள்ளனர். ஸ்டன் சிவாவின் கோரியோகிராஃபி பாலய்யாவின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். சண்டைக் காட்சிகள் மட்டுமே, பல கோடி செலவில் 85 நாள் எடுக்கப்பட்டுள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சல், உலகளாவிய மார்க்கெட்டைக் கவர பல நாட்டினரையும் சகட்டுமேனிக்கும் சூப்பர் ஹீரோவாக உலாவ விடுகின்றனர். பஞ்சபூதங்களையும் தன் விரலசைவில் வைத்திருக்கும் அகண்டாவை அவெஞ்சர்ஸில் ஒருவராக இணைத்துக் கொள்ளவேண்டும். அவெஞ்சர்ஸ் போலவே அகண்டாவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கக் கிடைக்கின்றது.

1 Comment

Comments are closed.