Shadow

வியப்பூட்டும் ஆலயங்கள்

Wonderul Hindu Temples

விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூரில் தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில், சிவனுக்கு முன்புறமாக உள்ள நந்திக்கு இடப்பக்கக் காது இல்லாதிருப்பதால் “செவி அறுந்த நந்தி தேவர்” என்று பெயர்.

மௌண்ட் அபுவில் (குஜராத்) அச்சல் கட் என்ற இடத்திலுள்ள அஞ்சலேஷ்வர் என்ற கோயிலில் லிங்கத்துக்குப் பதில் ஈஸ்வரனின் வலதுகால் கட்டை விரல் காணப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் உள்ள நந்தி 4320 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தினால் ஆனது.

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரு நல்லூர் திருத்தலம். அத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அஜ்மீர் தர்ஹாவில் உலக அதிசயமான உலகின் மிகப்பெரிய சட்டி உள்ளது. செம்பினால் செய்யப்பட்டு, இரண்டு ஆள் உயரத்தில் உள்ள இந்தச் சட்டியை படிக்கட்டுகளில் ஏறித்தான் உள்ளே பார்க்க முடியும்.

கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலிலுள்ள சிற்பங்களில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணிலிருந்து பார்த்தால் ராமரின் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் மறைந்து நின்று அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும்.

குருக்கள் காலில் தண்டை அணிந்து, சேலை கட்டி கண்ணனுக்குப் பூஜை செய்யும் திருத்தலம் குஜராத் பேட் துவாரகை கோயில்.

தர்மபுரியிலுள்ள ‘மல்லிகார்ஜுனர்’ கோயிலில் உள்ள “நவரங்க” மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு குச்சியை நுழைத்துத் தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலிக்க முடியும். ஒவ்வொரு தூணும் இரண்டு டன் முதல் மூன்று டன் வரை எடை கொண்டது.

நாச்சியார்கோயிலில் உள்ள கல்லாலான கருட வாகனத்தை, முதலில் சந்நிதியில் நான்கு பேர் தூக்குவார்கள். போகப்போக கருடன் கனத்துவிடுவதால் நான்கு எட்டாகி, எட்டிலிருந்து பதினாறாகி முடிவில் கோயில் வாசலில் ‘64′ பேர் தூக்கி வருவார்கள். அப்போது கருடனுக்கு முகத்தில் வியர்வை துளிர்க்குமாம்.

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் இரட்டை நடராஜர்களைத் தரிசிக்கலாம். இங்கு ஒரே சந்நிதியில் இருவரும் அருகருகே காட்சி தருகின்றனர். ஒரு நடராஜருக்கு தை முதல் ஆனி மாதம் வரையிலும், இன்னொருவருக்கு ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலும் (ஒன்று உத்ராயணம் மற்றது தட்சிணாயனம்) பூஜைகள் நடைபெறுகின்றன.

கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தின் அருகே அருள்மிகு நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தச் சிவன் கோயில் பிரகாரத்தில் உள்ள பழமையான வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.