Shadow

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

MSG - The Warrior: Lion Heart Tamil Review

எம் எஸ் ஜி (MSG) – ‘மெஸெஞ்சர் ஆஃப் காட்’ சீரிஸின் மூன்றாவது படமிது. இத்தொடர் படங்களின் நாயகன், தனக்கென ஒரு கூட்டத்தைக் கொண்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த துறவியான குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆவார். டி.ராஜேந்திரின் திறமையும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பையும் ஒருங்கே கொண்ட பவர் ஸ்டார் இவர் என்றே சொல்லலாம். மாயாஜாலப் படமான ‘லயன் ஹார்ட்’ அதகளக் காமெடியாய் உள்ளது. ஓர் உதாரணம்: போர்க்களத்தில் குதிக்கும் நாயகன் குர்மீத், யானையை (ஆம், யானையே தான்!) அநாயாசமாகத் தூக்கி எறிகிறார்.

வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பூமியை ஆக்கிரமிக்க வேண்டுமெனத் துக்கிரித்தனமான எண்ணம். நடக்குமா? முடியுமா? ராஜஸ்தான் சிங்கம் ‘ஷேர் தில்’ இருக்கும் பொழுது?

பொதுவாக, இத்தொடர் படங்களுக்கு இரண்டு இயக்குநர் இருப்பார்கள். முதல் இரண்டு படங்களை ஜீத்து ஆரோராவுடன் இணைந்து இயக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங், இப்படத்தைத் தன் மூத்த மகள் ஹனி ப்ரீத்துடன் இணைந்து இயக்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் – நடனம், வசனம், படத்தொகுப்பு, ஒப்பணை, பின்னணி இசை என மொத்தம் 30 துறைகளில் தன் பங்களிப்பை நல்கியுள்ளார் குர்மீத். இச்சாதனையை, ‘ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Asia Book of Records)’ உலகச் சாதனை என அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘எங்கள் குருஜிக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்களன்று!’ என அவரது சீடர் குழாம், பட வெளியீட்டிற்கு முன், ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்து ஒன்பது நெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ‘இந்தச் சடங்கு சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவதற்காக நம் கலாச்சாரத்தில் அனுஷ்டிக்கப் படுகிறது. இது வெறும் கொண்டாட்டம் அல்ல, நோய்களைப் பரப்பும் கிருமிகளைக் கொல்ல நடைமுறையிலுள்ள பழக்கங்களில் ஒன்று’ என்கிறார் கின்னஸ் சாதனையைக் குறித்து குர்மீத்.

படத்தின் முதல் 10 நிமிடத்தில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோ மூவிஸ்க்குச் சவால் விட்டுள்ளார் குர்மீத். கையிலுள்ள ஈட்டியைத் தூக்கிப் போடுகிறார் கூலிங் கிளாஸாக மாறுகிறது; ஒரு பவுச்சைத் (pouch) தூக்கிப் போடுகிறார் அதி நவீன வாகனமாக மாறுகிறது. ராஜஸ்தானில் இருக்கும் இந்த ‘லயன் ஹார்ட்’, 10 ஜேம்ஸ் பாண்ட்களுக்குச் சமம். ஏலியன் அச்சுறுத்தல் பற்றி அவருக்குச் சொல்லப்படுகிறது. அதைத் துச்சமென மதிக்கும் லயன் ஹார்ட், 300 வருடங்களுக்கு முன் ஏலியன்ஸை வென்ற மாவீரர் ‘ஷேர் தில்’ பற்றிச் சொல்கிறார். அந்த ஃப்ளாஷ்-பேக் தான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் வரும் ஏலியன்ஸ்கள் சரியான காலக் கொடுமை. வெளிர் நிற LED ஸ்ட்ரிப்பை உடையில் ஒட்டிக் கொண்டும், பேசும் பொழுது கோணங்கி சேஷ்டையில் முகத்தை வைத்துக் கொண்டும், நடக்கும் பொழுது இடுப்பில் சுளுக்கு இருப்பது போலும் உள்ளார்கள். 300 வருடங்களுக்குப் பின், பழி வாங்க வெறியோடு வரும் ஏலியன்ஸ் பல நிற LED ஸ்ட்ரிப்களை உடையில் ஒட்டிக் கொண்டு வருவது சிறப்பு. அதாவது அவர்களின் பலம் கூடி விட்டதெனப் புரிய வைக்கும் அழகான குறியீட்டுக் காட்சி.

லயன் ஹார்ட் 10 ஜேம்ஸ் பாண்ட் என்றால் ஷேர் தில்லோ 10 சூப்பர் மேன்களுக்குச் சமம். ஆனால், அவரையே வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் இயந்திரன் சுட்டு விடுகிறது. மண்ணில் விழும் லயன் ஹார்ட்டை, வெள்ளை உடையிலுள்ள ஒரு ரிஷி தாங்கிப் பிடித்து, ஒரு மலை சாரலிற்கு அழைத்துச் சென்று விடுகிறார். அந்த ரிஷியும் குர்மீத்தே! ஆக, அவர் படத்தில் மூன்று பாத்திரங்களில் கலக்கியுள்ளார் என்றறிக.

மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட திவ்ய அஸ்திரங்களைக் குகையில் இருந்து எடுக்க அறிவுறுத்துகிறார் ரிஷி. கொரில்லா, விநோத மிருகங்கள், ராட்சஷ மனிதர்கள் என வரிசை கட்டி பந்தாடிவிட்டு, ஏலியனை வேரறுக்க அஸ்திரங்களைக் கைப்பற்றுகிறார். அந்த அஸ்திரம் இருந்தால், கடல், நதி போன்ற பிரம்மாண்ட நீர் நிலைகளும் பிளந்து வழிவிடும். ஓரே ஓர் ஏலியன் மட்டும், “ஐய்யோ அம்மா.. உயிர்ப் பிச்சை கொடுங்க” என ஷேர் தில்லிடம் கெஞ்சுகிறது. சிங்கம் அமைதியாகி, “பாகல், பிழைச்சுப் போ” என அனுமதித்து விடுகிறது. லயன் ஹார்ட் என்றாலும் மனசு பூ போன்று மிக மென்மையானது.

இளைஞர்களுக்குத் தன் படத்தில் ‘மெஸெஞ் (!!?)’ உண்டு என்கிறார் குர்மீத். குல்லா அணிந்த இளைஞர்கள் சிலர், பசுக்களைப் பலியிடக் கொண்டு போகின்றனர். ‘பால் தரும் பசுவைக் கொல்வதா?’ என அட்வைஸ் செய்கிறார். இளைஞர்களோ அவரை உதாசீனப்படுத்த, அவர்கள் தலையில் தட்டி பசுக்களை மீட்கிறார். ஒரு பாட்டில், ஒட்டகத்தில் கலப்பை கட்டி பாலைவனத்தை உழுது, பாலையைச் சோலையாக்கி விடுகிறார்; விவசாயிகளைத் தற்கொலைகளில் இருந்து மீட்கிறார்.

படத்தின் தலைப்பில் வரும் ‘லயன் ஹார்ட்’டினுடைய ஏலியன்ஸ்க்கு எதிரான கர்ஜனை அடுத்த பாகத்தில்தான் நிகழவிருக்கிறது. தன்  சீடர்களின் விருப்பத்திற்கிணங்க, 15 மணி நேர நீண்ட தியானம் மூலமாக வயிற்றைக் குறைத்து சிக்ஸ்-பேக்கில் தோன்றவிருக்கிறாராம். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒரு திரைக்கதை எழுதியுள்ளார். அதுவும் விரைவில் வெளியாக உள்ளது. மற்ற படங்களைப் போலவே, அதுவும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும்.

பிரம்மாண்டம், அதி பிரம்மாண்டம்தான் அவரது ஸ்டைல் என ட்ரெயிலரைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.