Shadow

அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வரும் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சந்தோஷ் ராவணன், ”இந்தத் திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனைப் படித்து, இரண்டு நாட்களில், ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்குக் கதையைச் சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்குக் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்புத் தளத்தில் நாயகி இவானா வருணுடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்குத் தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்குப் புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் எனப் பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’.

இந்தத் திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினைத் தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூடப் பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்றப் பிறகு இதைப்பற்றிச் சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தின் கதை த்ரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காகச் சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார், ”இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ஆம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிடச் சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்தத் திரைப்படத்தைச் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை ஃபோனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையைக் கேட்டார்கள். நானும் வழங்கினேன்.

படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னைச் சந்தித்து அதனைக் காண்பித்தார். அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது. அவரிடம், ‘நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய்?’ என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அதற்கு அவர், ‘குடும்பத்துடன் ஆலயத்திற்குச் சென்று விருப்ப சீட்டைப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் போது அதில் ‘அந்தரன்’ என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது’ என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்.

இந்தத் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம். கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்குச் சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் ஜூன் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

பிரஜின், ”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தைக் கொண்டாடுவார்கள்” என்றார்.