
அந்தரன் விமர்சனம் | Andharan review
அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது நம்பிக்கை மிகையில்லை எனச் சொல்லுமளவிற்குப் படத்தின் கதை சுவாரசியமாகவும், நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாகவும் அமைந்துள்ளது. பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிப...







