Shadow

ஆந்திரா மெஸ் விமர்சனம்

Andhra-Mess-movie-review

யானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு வயதான ஜமீன்தாரிடம் அடைக்கலம் கோருகின்றன. யானை எறும்புகளைத் தேடி வருகின்றது. அந்தப் பணத்தால் யானை வாழ்ந்ததா அல்லது நான்கு எறும்புகள் வாழ்ந்தனவா என்பதே படத்தின் கதை.

கதாப்பாத்திரங்களைக் காமிக்கலாக அறிமுகம் செய்கின்றனர். ஆனால், அந்த ஃப்ளோ படம் முழுவதும் தொடர்வதில்லை. இடையில் இயக்குநர், “நதி ஒரே திசையில் தான் நகரமுடியும். நதியில் இருக்கிற படகு இரண்டு திசையில் நகரும். நதியில் இருக்கிற மீன் நாலு திசையில் நகர முடியும். அதைக் கொத்திட்டுப் போற பறவை அஞ்சு திசையில நகரலாம். ஆனா கரையோரம் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துட்டிருக்கிற ஒருத்தனோட மனசு, எல்லாத் திசையிலும் நகரும்” என்று சீரியசான குரலில் வாய்ஸ்-ஓவர் தருகிறார். நதி, படகு, மீன், வேடிக்கை பார்ப்பவனின் மனது போன்றவை எதைக் குறிக்கிறது என்ற தெளிவில்லை.

மனதில் எதையும் பதிய விடாமல் கலைத்துப் போட்டுக் கொண்டே உள்ளது பிரபாகரின் படத்தொகுப்பு. கதாப்பாத்திரங்கள் இன்ன தன்மையினர் என்பதை இயக்குநர் சரி வர பிரதிபலிக்கத் தவறியுள்ளார். யானையாகச் சித்தரிக்கப்படும் நபர், ‘தானொரு காலத்தில் யானையாக இருந்தேன்’ என்று பழம்பெருமையில் லயிக்கும் ஒரு சாதுவான ஆளாக உள்ளார். அவரிடம் எறும்புகள் வசமாகச் சிக்கியுள்ளன என்பதையே ஏற்க முடியவில்லை.

ராஜ் பரத்தின் அறிமுகத்தின் பொழுது, அவர் கோபக்காரராகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஆனால், ஜமீன்தாரிடம் அடைக்கலம் ஆன பிறகு, சுர்ரெனக் கோபம் வரும் ஆளாக மாறுகிறார். திருடர்களை அடிக்கும் பொழுது தடுக்கும் ஏ.பி.ஸ்ரீதர் மீது ராஜ் பரத்க்கு அப்படியென்ன கோபம் என்று புரியவில்லை.

ராஜ் பரத்க்கும், தேஜஸ்வினிக்குமான மெல்லிய ஈர்ப்பினை மிக அழகாகக் கவித்துவமாகக் காட்டியுள்ளனர். ஆனால், இரவில், காட்டுக்குள், அசத்தலான ஒளி அலங்காரங்களுக்கு இடையில், அவர்களுக்கிடையேயான ‘ஐஸ்’ உடையும் தருணம் சப்பென்று இருக்கிறது. அந்த இயல்பான ஈர்ப்பை, அதன் போக்கில் விடாமல் பேசி ஓர் ஒப்பந்தம் போல் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

எதைச் செய்தாலும் ரசனையோடு செய்யவேண்டும் என்ற எண்ணம் உடையவர் ஜமீன்தார். ஜமீன்தார் பாத்திரத்திற்கு அமரேந்திரன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஜமீன்தாரைப் போன்று சரியான கேரக்டர் ஷேட் அமையாததால் நான்கு எறும்புகளாய் வரும் ஏ.பி.ஸ்ரீதர், ராஜ் பரத், பாலாஜி மோகன், மதிவாணன் ராஜேந்திரன் ஆகியோரது கதாப்பாத்திரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜமீன்தாரின் வீடு மலைத் தொடர்களுக்கு நடுவில் உள்ளதாகக் காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், நடந்தே சென்று பாலாஜி மோகன் கடலை அடைகின்றார். படம் முடியும் பொழுது, ஜமீன்தார் உட்பட கதாப்பாத்திரங்கள் யாருமே நினைவில் நிற்பதில்லை. ராஜ் பரத்க்கும், தேஜஸ்வினிக்குமான சில தருணங்கள் மட்டுமே ஆந்திரா மெஸ்ஸின் சார்பாக மனதில் தங்கும் விஷயங்களாய் உள்ளன.

எறும்புகளை வரவேற்கத் துப்பாக்கியோடு தேஜஸ்வினி நிற்கும் கம்பீரமும், அந்தப் பார்வையும் செம! அந்த மிடுக்கைத் தேஜஸ்வினிக்குக் கொண்டு வந்ததில் ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா பிள்ளையின் திறமையும் அடக்கம். யானையாக உருவகப்படுத்தப்படும் வினோத், ராஜ் பரத், ஜமீன்தார் என அனைத்துப் பாத்திரங்களுக்குமே கச்சிதமாகப் பொருந்தும்படியான பிரத்தியேக உடை அணிந்து வருகின்றனர்.

தேஜஸ்வினி கதாப்பாத்திரத்தை மேலும் தனித்துக் காட்ட, வழக்கமான லூசுப் பெண் கதாநாயகியாக பூஜா தேவரியாவைச் சில காட்சிகளில் கொண்டு வருகின்றனர். அவரது அத்தியாயம் முழுவதும் கத்தரித்தால் கூடப் படத்தில் பெரிய மாற்றம் எதுவும் வராது. தனித் தனி காட்சிகளாக முகேஷின் ஒளிப்பதிவில் அழகியல்தன்மையோடு மிளிரும் படம், ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகின்றது.