Search
Tik-Tik-Tik-movie-review

டிக்: டிக்: டிக் விமர்சனம்

Tik-Tik-Tik-movie-review

வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, ‘ஆர்மகெடான்’ ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர்.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குள் சென்று அணு ஆயுதத்தை எப்படித் திருடுவது என்று எந்தத் திட்டத்தையும் வகுத்துக் கொள்கிறார்கள் இல்லை. மையக்கதையில் இருந்து படத்தின் இரண்டாம் பாதியில் விலகும் இந்த அத்தியாயத்தில் சுவாரசியப் பஞ்சம் நிலவுகிறது. இதை விட, முதற்பாதியில் காட்டப்படும் பிரதான பாத்திரங்களின் அறிமுகமே பரவாயில்லாமல் இருந்தது. நிவேதா பெத்துராஜுக்கும், ஜெயம் ரவிக்கும் இடையில் காதல் மலர்ந்தது போன்ற அபத்தத்தைத் தவிர்த்தது ஆசுவாசத்தை அளிக்கிறது. ஆனால், ஒரு காட்சியில் காவலர்கள் ரோந்து வருகிறார்களென நிவேதா சட்டென்று ரவியை முத்தமிடுகிறார். ஙே.! தன்னைக் கொல்ல நடக்கும் முயற்சியை சீஃப்-இடமோ, கேப்டனிடமோ கூடச் சொல்லாமல் விடுகிறார். நிலாவில் முதலில் கால் வைக்கும் பெருமையைக் கதையில் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை நம் நாயகர்கள். கதையில் கவனம் செலுத்தி, இது போன்று தடம் மாறுவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும். அலுவலகத்திற்குள் ஒரு கொலையைச் செய்வது எல்லாம் சாதாரணமாய்க் காட்டுகின்றனர். மிஸ் ஆகும் அந்த லெஃப்டிபென்டட் என்ன ஆனார் என்று யாருமே கவலை கொள்ளமாட்டார்களா என்ன?

வின்சென்ட் அசோகன், ஜெயப்ரகாஷ், அர்ஜுனன், ரமேஷ் திலக், ரித்திகா ஆகியோர் பிரதான வேடங்கள் இணைத்துள்ளனர். இவர்களுடன் ஆரோன் அசிஸ் எனும் மலேசிய நடிகரும் சீ# நாட்டு அதிகாரியாக வருகிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மகனுக்கும் இடையே உள்ள பந்தத்தைச் சொல்லும் பாடல் ரசனையாகப் படமாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான படங்களில் இருந்து விலகி, ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களன்களைச் சோதித்து வருவது பாரட்டத்தக்க விஷயம். அதுவும், மிருதன் படத்திற்குப் பிறகு இயக்குநர் சக்தி செளந்திரராஜனுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டது துணிச்சலான விஷயம். கலை இயக்குநர் மூர்த்தியின் பங்கு படத்தின் விஷுவல் நம்பகத்தன்மையைத் தக்க வைக்க உதவியுள்ளது. இப்படம் இவருக்கு அழியாப் புகழைக் கொண்டு சேர்க்கும். அவருக்கு அந்தப் புகழைக் கச்சிதமாகக் கொண்டு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். திரைக்கதை இலாகாவை வலுவாகக் கட்டமைத்திருந்தால், இந்தப் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.