
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, ‘என்ன தவம் செய்தேனோ!’ என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.
இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘மாயிலைத் தோரணம்’ எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் ‘ட்விஸ்ட்’களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார்.
“பாக்கியம்மாஆ” எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம் அந்தப் புள்ளியை அவ்வளவு அழுத்தமாகத் தொடவில்லை. கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் R.N.R.மனோகர் க்ளோஸ்-அப் ஷாட்களில், ஆவேசமான வில்லனாகப் படம் நெடுகே வருகிறார். இவரைக் கொண்டு பார்வையாளர்களிடம் ஒரு பதற்றத்தை, சமூக அவலத்தை அழுத்தமாகச் சொல்ல ஏற்படுத்த இயக்குநர் தவறியுள்ளார்.
நாயகன், நாயகி முகங்கள் பரிச்சயமாக இல்லாததோடு, சட்டென்று பதியுமாறு காட்சிகளும் இல்லாதது குறை. முதற்பாதியில் சிங்கம்புலியைக் கொண்டு ரசிக்கும்படியான நகைச்சுவைக் காட்சிகளை அமைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் மயில்சாமியின் நகைச்சுவைக் காட்சிகள் கதைக்கு உதவாவிட்டாலும், மயில்சாமியைப் பிரதான கதாப்பாத்திரமாக நன்றாக உபயோகித்துள்ளார் முரபாசெலன்.
காதல் அச்சுறுத்தலின் பேரில் வராது. கதாநாயகி விஷ்ணு பிரியா அரிவாள்மனையைக் கழுத்தில் வைத்துக் கொண்டு, நாயகன் கஜினியின் காதலை நிர்பந்தித்துக் கோருகிறார். வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியோடு ஊரை விட்டுச் செல்கிறார். இந்தப் பலவீனமான தொடக்கத்தின் காரணத்தாலோ என்னவோ, அவர்களிடையேயான காதல் போதுமான ஈர்ப்பைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தவில்லை.
டெல்லி கணேஷ், வில்லன் R.N.R.மனோகரின் நண்பராக வருகிறார். வருகின்ற காட்சிகள் அனைத்திலும் தன் அனுபவத்தால் அந்தக் காட்சியைத் தன் வசமாக்கிக் கொள்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களும் அத்தகைய ரசவாதத்தை நிகழ்த்தி இருப்பார்களே எனில், பார்வையாளர்களும் தவம் செய்தவர்களாக உணர்ந்திருப்பர்.