Shadow

அங்காரகன் விமர்சனம் :

மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது.  அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.  அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.

ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன்.  இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது.  இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கிக் கொள்வதற்காக வந்திருப்பவர்கள், அவ்வபோது அந்த ரெஸார்ட்டுக்கு வந்து கதை எழுதும் ஒரு பெண் எழுத்தாளர்,  தன் வயதான மனைவியோடு வந்து தங்கியிருக்கும் எக்ஸ் மிலிட்டரி ஆபிஸர்,  இவர்கள் போக அந்த ரெஸார்ட்டின் இன்சார்ஜ்,  மேனேஜர் (அங்காடித் தெரு மகேஷ்),  ரிஷப்சனிஸ்ட், வாட்ச்மேன் (அப்புக்குட்டி), வேலைக்காரி மற்றும் அந்த ரெஸார்ட்டின் வயதான ஓனர் பெண்மணி. இவை தவிர்த்து விசாரணைக்கு வரும் உயர் போலீஸ் அதிகாரியான சத்யராஜ், இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டேபிள்கள். மொத்த கதாபாத்திரங்கள் இவ்வளவே.

இது தவிர்த்து படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் 1900 காலகட்டத்தில் நடந்த  ஒரு ராணியின் கதை. பிரிட்டிஷ் இந்தியாவின் காலகட்டத்தில் மூன்று மலை கிராமங்கள் மட்டும் அதிகாரத்தில் இருக்கும் ராணியை எதிர்க்க, அவர்களின் கொட்டத்தை அடக்க ராணி படையை அனுப்பும் காட்சியுடன் தான் படம்  துவங்குகிறது.  பின்னர் 2023ல் ரெசார்ட்டில் ஒரு இளம் பெண்ணை காணவில்லை என்று நிகழ்காலத்திற்கு வருகிறார்கள்.

ராணியின் கதை முதற்கொண்டு ரெஸார்ட்டில் இருக்கும் நபர்களின் கதை என எந்தக் கதையிலுமே அழுத்தம் இல்லை.  படத்தின் இரண்டாம் பாதியில் பாதி வரை காணாமல் போன ஒரு இளம் பெண்ணை தேடுகிறார்கள் என்பது மட்டுமே கதையாக இருக்கிறது. சரி, தேடுகிற படலத்திலாவது சுவாரஸ்யம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  தேடுகிறோம் என்கின்ற பெயரில் சத்யராஜ் ஒரு பக்கம் ரெஸார்ட்டில் தங்கி இருப்பவர்களிடம் என்ன நடந்தது என்று கதை கேட்டுக் கொண்டு இருக்க, மறுபக்கம் அந்த இன்ஸ்பெக்டர் ரெஸார்ட்டில் தங்கி இருக்கும் வேறு சிலரிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். சரி அவர்கள் சொல்கின்ற கதையாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா..? என்று பார்த்தால் அதுவும் இல்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் திடீரென்று திரைப்படம் பேய்ப்படமாக மாறுகிறது.  பேய் ஏன் வந்தது என்றே நாம் தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க,  சிவலிங்கத்தின் மீது சாத்தியிருந்த ருத்ராட்ச மாலையை பேய் பிடித்தவர்கள் கழுத்தில்  போட்டதும் பேய் போய்விடுகிறது. இறுதியில் சத்யராஜ் மற்றும் அவர் குழுவினர் அடிக்கின்ற ட்விஸ்டைப் பார்த்ததும் கைதட்டத் தோன்றவில்லை. சிரிப்புதான் வருகிறது. ஒரு ரெஸார்ட்டை நடத்துபவர்கள் இவ்வளவு முட்டாளாகவா இருப்பார்கள்..? இல்லை இப்படங்களை பார்க்க வருகின்ற நாம் அப்படி இருப்போம் என்று நினைத்துக் கொள்கிறார்களா..? என்று தெரியவில்லை.  இப்படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்களை விட்டுவிடுங்கள். அனுபவம் வாய்ந்த நடிகர்கள் கூட மிகச் சுமாராகவே நடித்திருப்பது போல் தெரிகிறது.

மோகன் தச்சு இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், அங்காடித் தெரு மகேஷ், அப்புக்குட்டி, ஸ்ரீபதி, ரெய்னா காரத், சோஃபி ஆண்டனி மற்றும் பல புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.  மோகன் தச்சுவும் கலைவாணனும் ஒளிப்பதிவை கவனிக்க,  கார்த்திக் கு இசையமைத்திருக்கிறார்.  காட்சிகளில் இல்லாத பேய்களுக்கான பய உணர்வை இசையும் சிறப்பு சப்தங்களும் மட்டுமே ஏற்படுத்தி ஈடு செய்கின்றன.

மொத்தத்தில் அங்காரகன் கதையோ திரைக்கதையோ மேக்கிங்கோ, அல்லது சிறப்பான நடிப்போ இப்படி எதுவுமே இல்லாத பல காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.