‘திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் படம். இப்படம், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நினைவுகூரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
காதல் எனும் போர்வையில், பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்கள் சொல்லும் நபருடன் அப்பெண்கள் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என மிரட்டுகிறது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று. மிரட்டப்பட்டும் அடிப்பணியாத பெண்களைக் கொலை செய்யவும் துணிகிறது அக்குழு. ஜெஸ்ஸி எனும் இளம்பெண், அக்குழுவால் பாதிக்கப்படும் பொழுது நாயகன் ஜீவா காப்பாற்றிவிடுகிறான். இதனால் கோபமுறும் வில்லன் துரைபாண்டி, ஜீவாவையும், அவன் காப்பாற்றும் பெண்களையும் பழிவாங்கத் துணிகிறான். அதிலிருந்து நாயகனும், பாதிக்கப்பட்ட பெண்களும் எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
நாயகியாக பிரணாளி கோக்ரே நடித்துள்ளார். பாடலுக்கும், நாயகனை வியக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். அவரது நடிப்பும் அந்தளவிற்கே உதவியுள்ளது. சீரியல்களில் நடித்து வரும் நிஷ்மா செங்கப்பா, நாயகியின் தோழி ஜெஸ்ஸியாக நடித்துள்ளார். அவரது சின்னத்திரை அனுபவம் நாயகியை மீறித் தனித்துத் தெரிகிறது. நாயகனின் நண்பனாக சத்யன் வந்தாலும், நகைச்சுவைக்கோ, படத்தின் போக்கிற்கோ உதவவில்லை. ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் சுமார் ரகமாகவே உள்ளன.
வில்லன் துரைபாண்டியாக டேனியல் பாலாஜி நடித்துள்ளார். பொல்லாதவன் பட்த்தில் வெற்றிமாறன் அளித்திருந்த அதே ஸ்டைல் வில்லத்தனத்தை மாற்றாமல் பயன்படுத்தியுள்ளார் மித்ரன் R. ஜவஹர். வில்லன் கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்தால் படத்தின் தன்மையும் மேம்பட்டிருக்கும். எமோஷன்களைச் சுமக்குமளவு பிரதான பாத்திரங்களின் நடிப்பு இல்லாத பட்சத்தில், திரைக்கதையின் சுவாரசியத்தைக் கொண்டே அதை நிரப்பியிருக்கவேண்டும்.
எந்தப் பக்கமிருந்தும் எத்தனை பேர் வந்தாலும், தனது நீண்ட கால்களால் அநாயசமாக எட்டி உதைக்கக் கூடியவராக இருந்தாலும், தனது ஹீரோயிசத்தை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொள்கிறார் அறிமுக நடிகர் இஷான். அரியவனாய்த் தனித்துத் தெரியுமளவு திரைக்கதை இஷானுக்கு உதவவில்லை. ஆக்ஷனுக்கு அவரது உயரம் உதவினாலும், ஏற்ற இறக்கங்கள் இல்லாத அவரது முக பாவனைகளில் இஷான் கவனம் செலுத்தவேண்டும். மாதர் தம்மை இழிவு செய்யும் கொடுமையை எதிர்த்து, ‘போடா மயிரு’ என மாதரே தைரியமாகக் களமிறங்க வேண்டுமென்ற கருத்தாக்கத்தைப் படம் முன்வைப்பது சிறப்பு.