Shadow

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

சில நூற்றாண்டுகளாகவே, இரண்டு ரகசிய குழுக்கள் இடையே துவந்த யுத்தம் நடந்து வருகிறது. இன்றளவும் அது தொடர்வதாக நம்பப்படுகிறது. அசாசின்ஸ் என்ற குழுவிற்கும், டெம்ப்ளர்ஸ் என்ற குழுவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் தான் ‘அசாசின்ஸ் க்ரீட்’.

Assassins Creed Video Game Franchise

அசாசின் என்றால் மதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக முக்கியமான நபரைக் குறி வைத்துக் கொலை செய்யும் கொலைக்காரர் எனப் பொருள். ‘அசாசின்’ என்ற வார்த்தை உருவாவதற்கே ‘ஹஷாஷின்’ என்ற வடக்குப் பெர்ஷியாவைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த நிஸாரி இஸ்மாயிலிகள் தான் காரணம். சிலுவைப் போர்களின் பொழுது, சுமார் 300 வருடங்களில் அவர்கள் எண்ணற்றவர்களைக் கொன்றுள்ளனர். ஓரிடத்தில் இருந்து சட்டெனப் பதுங்கி மறைவதில் வல்லவர்கள். பயம் என்றால் என்னவென்று அறியாத இவர்கள், சுதிந்திரமாகச் செயல்படக் கூடியவர்கள்.

டெம்ப்ளர்ஸ் என்றால் மதத்திற்காகப் போராடும் வீரன் எனப் பொருள். ரோமின் கத்தோலிக்கத் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதால், அளவற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். பெரும் பணக்காரர்கள் இதில் அங்கம் வகித்தனர். சகலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடித்த மிக சக்தி வாய்ந்த குழு. அவர்களின் ஒரே தலைவலி, கட்டுப்பாடற்ற ‘அசாசின்ஸ்’ தான். ‘அசாசின்ஸ் க்ரீட்’ வீடியோ கேமின் காலகட்டம், இந்த இரண்டு குழுக்களும் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு, தங்களுக்குள் ரகசியமாக சண்டையிட்டுக் கொண்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அதே காலகட்டத்தைத் தழுவியுள்ளனர்.

Templars Vs Assassins

நவீன யுகத்தில், ‘ஆப்ஸ்டெர்கோ நிறுவனம்’ எனும் பெயரில் டெம்ப்ளர்ஸ் இயங்கி வருகிறார்கள். ஆப்ஸ்ட்ரெகோ என்றால் லத்தீன் மொழியில் ‘புனிதமாக்கப்பட்டது’ எனப் பொருள். அந்நிறுவனம், மரண தண்டனை குற்றவாளியான Cal Lynch-ஐ மீட்டு, அனிமஸ் எனும் இயந்திரத்தில் செலுத்துகின்றனர். அவ்வியந்திரம், Cal-இன் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தும்; அதாவது அவன் டி.என்.ஏ.வில் இருக்கும் மூதாதையரின் நினைவடுக்குகளில் பயணிக்கச் செய்யும். அப்படிப்பயணிக்கச் செய்து, ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எங்கு மறைக்க வைக்கப்பட்டுள்ளது என அறிய நினைக்கிறார்கள் நவீன டெம்ப்ளர்ஸ். 15 ஆம் நூற்றாண்டின் ஸ்பெயினுக்குப் வாழும் Aguilar de Nerha எனும் அசாசினினைப் பற்றியும், அக்காலகட்டத்தின் வரலாறை அறிவதோடு. தன் மூதாதையரின் திறமையையும் பெறுகிறான் Cal Lynch.

டெம்ப்ளர்ஸால் ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ இருக்கும் இடத்தை அறிய முடிந்ததா, அல்லது புதிய சக்திகளைப் பெறும் Cal Lynch தன் மூதாதையர் பாதையில் டெம்ப்ளர்ஸை எதிர்க்கிறானா என்பதுதான் ‘அசாசின்ஸ் க்ரீட்’ படத்தின் கதை.

இப்படம், வெள்ளியன்று (டிச. 30, 2016) வெளியாக உள்ளது. அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், இந்த வாரம் ஆசியா கண்டத்தில் அதிக ஓப்பனிங்கைப் பெற்று முதன்மையிடம் பெற்றுள்ளது.