நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நடிகர் அஸ்வின் குமார், “விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா S, “சின்ன படங்கள் தயாரிப்பது வெளியிடுவது இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. லோகேஷ் பெரிய படம் தருகிறார் அதில் 1000 பேர் பிழைக்கிறார்கள், அதே போல் சின்ன படங்களில் 200 பேர் வரை பிழைக்கிறார்கள். சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தர வேண்டும். லோகேஷ் போன்ற இயக்குநர் இம்மாதிரி படங்களுக்கு வந்து ஆதரவு தருவது மகிழ்ச்சி. இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் மிகவும் திறமையானவர் மிக நன்றாக இயக்கியுள்ளார். காளிதாஸ் அப்பா ஜெயராமுடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன், மிகவும் சிறந்த நடிகர். இப்போது காளிதாஸுடன் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.
நமீதா பிரமோத், “என்னோட முதல் பை லிங்குவல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியாவது மகிழ்ச்சி. காளிதாஸ் மிகச் சிறந்த கோ ஸ்டார், ஷூட்டிங்கில் நடிக்கும்போது நிறைய உதவிகள் செய்தார். இயக்குநர் மிகத் திறமையானவர், மிக நன்றாக இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இங்கு வந்தது எங்களுக்குப் பெருமை. இது நல்லதொரு திரில்லர் அனுபவம் தரும்” என்றார்.
இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் S, “என் படம் தமிழ், மலையாளம் மொழிகளில் வரவுள்ளது. படம் பாருங்கள் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும். இந்தப் படம் இது வரை நீங்கள் பார்க்காத த்ரில்லர் அனுபவத்தைத் தரும்” என்றார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம், “விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும். ஆனால், உண்மையிலேயே இந்தப் படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும்” என்றார்.இ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் .ஆனால் மாநகரம் செய்யும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. சின்ன படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்றாலும், ஒரு ஃபோன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப் பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டென்ட்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்தப் படத்தின் ட்ரெய்லரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.