லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.
சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முடிவில், தானோஸ் ஒரு புன்னகையுடன், ‘என்னை விட சூப்பர் வில்லன் யாரிருக்கா?’ என ஒரு சொடுக்கில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களுக்கே உரிய கலகலப்பையும் சுவாரசியத்தையும் தன்னுடனேயே கொண்டு சென்றுவிட்டார். அதற்குப் பின்னான மார்வெலின் படங்கள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாக உள்ளது. இணை பிரபஞ்சம், பன்னண்டம், வாண்டா விஷன் (டிஸ்னி+ தொடர்), மிஸ். மார்வெல் (டிஸ்னி+ தொடர்) என பல விஷயங்கள் தெரிந்தோ, புரிந்தோ, பார்த்திருந்தால்தான், ‘தி மார்வெல்ஸ்’ படம் புரியும் என்ற அபிப்ராயம் நிலவுகிறது. இப்படத்திலும், தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் குவாண்டம், Anomaly (ஒழுங்கின்மை), விண்மீன் திரள்களுக்கு இடையேயான அச்சுறுத்தல் (Inter-galactic threat), மோதுகை (Collision) என்ற மார்வெலின் சமீபத்திய பித்தும் உன்மத்தமும் (Madness & Mania) உள்ளன.
மார்வெல் படங்கள் அளித்து வரும் இத்தகைய அயற்சியும், இயக்குநர் நியாவிற்கு முன்னுள்ள சவால்களில் பிரதானமானது. மேலும், கடவுளுக்கு நிகரான அதிசக்தி படைத்த கேப்டன் மார்வெலின் முதற்படமே எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யவில்லை. ‘பன்னண்டம், டிஸ்னி+ தொடர்கள் பற்றிலாம் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களுக்குக் கவலைப்படாம, ‘தி மார்வெல்ஸ்’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்’ என்கிறார் இயக்குநர் நியா டகோஸ்டா.
கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக நடித்திருக்கும் இமான் வெல்லானி தான் படத்தின் ஈர்ப்புச் சக்தி. பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா நாட்டு நடிகையான இமான் வெல்லானி தான் கேப்டன் மார்வெலைக் காப்பாற்றுகிறார். ‘சூப்பர் ஹீரோவென்றால் செய்த தவறை ஒத்துக் கொள்ளக் கூடாதா?’ என்ற ஞானத்தை, கேப்டன் மார்வெல் பெற உதவுகிறார். பூமியையும், சூரியனையும், தனது கிரகமான ஹல்லாவிற்காக உறிஞ்ச நினைக்கும் வில்லி க்ரீ போராளி டார்-பென்னைத் தடுக்க, கேப்டன் மார்வெல் தனியாளாக முயலாமல், மிஸ் மார்வெல், ஃபோட்டானுடன் இணைந்து “தி மார்வெல்ஸ்” எனும் குழு அமைக்கிறார். பிரபஞ்சத்தின் சமநிலை குலையாமல் காப்பாற்றப்படுகிறது. ஆனால், மார்வெலின் சூப்பர் ஹீரோ பிரபஞ்சம் தன்னை ரீபூட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.