Shadow

ஐங்கரன் விமர்சனம்

நாடு நலம்பெற எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது ஐங்கரன் திரைப்படம்.

2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தற்போது படம் திரைகாணுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் என்ஜினியரீங் மாணவரான ஜீ.வி.பிரகாஷ், மக்களுக்குத் தேவையானதை விஞ்ஞான ரீதியாக பயன்படும் வகையில் சின்ன சின்னதாகச் சாதனங்களைச் செய்கிறார். அதற்கான அங்கீகாரத்திற்கு அலையோ அலை என அலைகிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் சோர்வான ஜீவிக்கு மிக முக்கியமான வாய்ப்பு ஓர் உணர்ச்சிகரமான சம்பவம் மூலமாக வருகிறது. அதைத் தக்கவைத்துக் கொண்டாரா என்ற கேள்விக்கான பதிலைச் சுவாரசியமாக திரையில் காணலாம். இந்த விஞ்ஞான என்ஜினியர் நாயகனையும், வடநாட்டுக் கொள்ளை லீடராக வரும் சித்தார்த் சங்கரையும், அவரது குழுவையும் ஒரு பிரச்சனையோடு இணைத்த விதம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் உள்ள ஜீவி என்பதால் சில இடங்களில் அவரது நடிப்பில் ஒரு குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கிறது. அந்தக் குறையை வேறு சில இடங்களில் சரி செய்துவிடுகிறார் . மகிமா நம்பியார் கதாபாத்திரம் படத்திற்கு சிறு உதவியும் செய்யவில்லை. காளி வெங்கட் போர்ஷன் மிகச் சிறியது என்றாலும் மகிமா நம்பியாரோடு அதிக காட்சிகளில் இவர்தான் நடிக்கிறார். ஜீவியின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேனை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். வில்லனாக வரும் சித்தார்த் சங்கர் அட்டகாசம். அவரது சைலன்ட் பாடி லாங்வேஜ் அசரடிக்கிறது. ஹரீஷ் பேரிடி அசால்டாக நடித்து கதைக்குள் பொருந்தி விடுகிறார்.

பாடல்களை விட பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு உதவி புரிந்துள்ளது. சில ஜம்ப் ஷாட்ஸ் பட்த்தின் ஓட்டத்திற்குத் தொந்தரவு செய்கிறது. எடிட்டர் இன்னும் ஷார்ப்னெஸ் காட்டியிருக்கலாம்.

ஹீரோவின் பதுப்புது விஞ்ஞான ஐடியாக்கள், காட்சிகளாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது படத்தின் சிறுகுறை. கதை – திரைக்கதையில், பேப்பரில் இருந்த தெளிவு சுளிவு எதுவும் திரையில் சரியாக வெளிப்படவில்லை என்றாலும் படம் பின்பாதியில் தொட்டிருக்கும் ஒரு விசயம் நிச்சயம் பாராட்டுக்குரியது. படத்தின் வேகமும் படம் பார்க்கும்போது சோர்வடைய வைக்காமல் நன்றாக என்டர்டெயின் செய்கிறது.

– ஜெகன் கவிராஜ்