பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம்.
தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை.
வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம்.
விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி ‘மாஸ்’ எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை.
மருத்துவக் கல்லூரி மாணவி மலர்விழியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கண்டதும் நாயகனைக் காதல் கொள்ள உதவியுள்ள வழக்கமான நாயகி. தம்பி ராமையா கொஞ்சமும் நகைச்சுவைக்கு உதவவில்லை. நாயகனுக்கு முன் படத்தில் அறிமுகமாகும் சதீஷுக்கும் போதிய காட்சிகள் இல்லாததோடு, கிடைத்த காட்சிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதலில் விழுந்த விஜய் கொஞ்சலாக ஆடும்பொழுது, “இப்படிலாம் பண்ணாத!” எனச் சொல்லும் பொழுது மட்டும் ரசிக்க வைக்கிறார்.
நாயகன் நாயகி தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்ளாத அழகான காதலை தங்கள் நடிப்பில் கொண்டு வந்துள்ளனர் ஒரு ஜோடி. சின்னச் சின்ன எக்ஸ்பிரஷனிலும்கலக்கும் ஹரீஷ் உத்தமனும், றெக்க படத்தில் மாலாக்காவாக நடித்த ஷிஜா ரோஸுமே அந்த ஜோடி! ஷிஜா ரோஸ் நாயகியின் அக்காவாக இப்படத்தில் தோன்றியுள்ளார். ஜெகபதி பாபுவின் அல்லக்கையாக ஸ்ரீமனும், அடியாளாக டேனியல் பாலாஜியும் நடித்துள்ளனர்.
நாயகனின் பார்வையில் அதீத பில்டப்களோடு பெரியகண்ணு எனும் PK-வாக அறிமுகமாகும் ஜெகபதி பாபு, நாயகனைச் சந்திக்கும் பொழுது அவ்வளவாக ஈர்க்கவில்லை. அவர்கள் இருவரும் காட்சி போலவே, கத்தி சண்டை படத்திலும் ஜெகபதி பாபுவிற்கும் நடப்பது காரணமாக இருக்கலாம். ‘போலி இன்கம்-டேக்ஸ் ரைடு’ காட்சி என காட்சி தொடங்கும்பொழுதே ஒரு சின்ன சலிப்பு எழுகிறது. இத்தகைய சலிப்பினை வர விடாமல், சுவாரசியப்படுத்த பரதன் தவறி விடுகிறார்.
அத்தனை குறைகளையும் மறக்க வைப்பது விஜய் மட்டுமே!