Shadow

கத்தி சண்டை விமர்சனம்

Kathi sandai vimarsanam

கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர்.

நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். ‘எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு’ என காரணமும் கண்டுபிடிக்கிறார்.

டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். ‘பணம் தருகிறோம். ஓடிடு’ என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார், எங்கிருந்து வருகிறார், என்ன வேலை செய்கிறார் என்ற எந்த கவலையும் கேள்வியும் இல்லாத நாயகியின் அண்ணனும், டெபுடி கமிஷ்னருமான ஜெகபதி பாபுதான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரம் என்பதில் சற்றும் மிகையில்லை.

மனோதத்துவ நிபுனர் பூத்ரியாக வடிவேலு ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். சுராஜ், வடிவேலு காம்பினேஷன் தான் படத்தின் எதிர்பார்ப்பிற்கே முக்கிய காரணம். பூத்ரி என்ற பெயரும், அவர் அறிமுகமாகும் தோரணையும் தவிர்த்து ஏமாற்றமே மிச்சம். வற்றாத ஜீவ நதியே ஏமாற்றி விட்ட சூழலில், சூரியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

விஷாலின் துணிச்சல் மெய்சிலிர்க்க வைக்கிறது. டெபுடி கமிஷ்னரின் காவலில் இருந்து நைஸாக இரவில் வெளியேறி, ஒரு அமைச்சரைக் கொன்று விட்டு வருகிறார். கண்ணைக் கட்டும் சாகசம் செய்வதில் விஷாலை விட்டால் தமிழ்நாட்டில் ஆளில்லை என்றே சொல்லவேண்டும்.

கிராமங்களின் வசதியின்மையைக் காட்டி, நாட்டில் ஊழல் நடக்குது எனச் சொல்லி, விஷாலும் வடிவேலுவும் விவசாயம் செய்வதாக படம் சுபமாக முடிகிறது.