Shadow

றெக்க விமர்சனம்

rekka-tamil-vimarsanam

எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த ‘மாஸ் ஹீரோ’ படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன்.

கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். ‘வாவ்.. வாட் எ மேன்!’ என நாயகி போல் படம் பார்ப்பவர்களால் ஆச்சரியப்பட முடியவில்லை.

‘பன்ச் டயலாக்!! யாரு நானு? நான் அவ்ளோ சீன்லாம் இல்லை. பஞ்சு மாதிரி பேசுவேன்’ என வசனத்தில் காட்டும் பணிவை ஆக்‌ஷனில் தாறுமாறாகத் தெறிக்க விட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது ஒரு கையசைப்புக்கு 5 பேர் பறக்கணும் என்ற விதியை மட்டும் தளர்த்தியிருந்தால், விஜய் சேதுபதிக்கு இது ஒரு நல்ல ஆக்‌ஷன் படமாக அமைந்திருக்கும்.

கோர்வையற்றுப் போய்க் கொண்டே இருக்கும் படத்தில் ஒரு கிளாஸிக்கான ஃப்ளாஷ்-பேக் வருகிறது. அவ்வத்தியாயத்தின் நாயகன் செல்வமாக வரும் கிஷோர். சின்ன பசங்க அவரது காதலைக் கிண்டல் செய்யும் பொழுது, மிக அழகாக வெட்கப்படுகிறார் கிஷோர். அதே போல் ஓர் அற்புதமான தருணம் கூட படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்க்காதது தான் துரதிர்ஷ்டம். படத்தின் எல்லாக் குறையையும் மறக்க வைக்கும்படி, ‘மாலாக்கா’ எனும் ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு மொத்த படத்தின் போக்கையும் வேறு திசைக்குக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ரத்தினசிவா. மாலாக்காவாக நடித்திருக்கும் ஷிஜா ரோஸ் மிக அற்புதமான தேர்வு. ஷிஜா ரோஸ் – கிஷோர் லவ் போர்ஷன் முன் விஜய் சேதுபதி – லட்சுமி மேனன் காட்சிகள் கொடுமையின் உச்சமாய் பொலிவிழந்து விடுகிறது. படத்தின் நாயகி என்றே மாலாக்காவைச் சொல்லலாம். ஷிஜா ரோஸும், விஜய் சேதுபதியும் சந்திக்கும் இடத்தில் ‘றெக்க’ கட்டி பறக்கும் படம், கடைசி 20 நிமிடங்கள் அதகளமாய் உள்ளது.

படத்தில் இரண்டு வில்லன்கள். கும்பகோணம் டேவிட்டாக ஹரீஷ் உத்தமன்; கோவை செழியனாக கபீர் சிங். இரண்டு பேரும் அவ்வளவு அழகாக ஆஜானுபாகுவாய் மிரட்டி உள்ளார்கள். அதிலும் ஹரீஷ் உத்தமன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதி பன்ச் வசனம் பேச முயற்சி செய்யும் பொழுதெல்லாம், ‘போடா’ என தண்ணியை ஊற்றி அணைத்து விடுகிறார். படத்தைத் தொடங்கி வைப்பதே வில்லன்கள் தான். ஏரியல் ஷாட்டிலிருந்து தோப்புக்குள் இறங்கும் கேமிரா கோணத்தில் இருந்து இரண்டு வில்லன்களையும் ஒரே ஃப்ரேமில் காட்டி கதையைத் தொடங்கி விடுகிறார் இயக்குநர். அங்குத் தொடங்கும் எதிர்பார்ப்பு பின் மெல்லத் தேய்ந்து, படத்தின் முடிவில் தான் மீண்டும் சூடு பிடிக்கிறது.

க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில், இரண்டு வில்லன்களும் ஹீரோவும் ஒருவரை மாற்றி ஒருவர் அடித்துக் கொள்ளும் பொழுது நிறைவாய்ப் புன்னகைக்கின்றனர் திரையரங்கில். அந்த பார்க்கிங்கில் இருக்கும் கார்கள் பிளாஸ்டிக்கால் செய்தவையா அல்லது நடிகர்களின் உடம்பு வலிமையான உலோகத்தாலானதா என ஐயத்தை எழுப்புகிறது ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர் வடிவமைத்திருக்கும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி.

நடுவில், படம் பார்ப்பவர்களின் பொறுமையை அசைத்துப் பார்க்கும் திரைக்கதை, முடியும் பொழுது ஒரு பூரண நிறைவை அளிப்பதாய் உள்ளது. ரத்தினசிவாவின் திரைக்கதை மேஜிக்கை படத்தின் முடிவிலேயே உணர முடிகிறது. படம் முழுவதும் அந்த மேஜிக் நிறைந்து இருந்திருந்தால், படம் வேற லெவல் மாஸ் படமாய் இருந்திருக்கும்.

1 Comment

Comments are closed.