Shadow

கோடிட்ட இடங்களை நிரப்புக விமர்சனம்

KIN

புள்ளி வைத்துக் கவனமாக இருக்க வேண்டிய இடத்தில் கோடு போட்டு மங்காத்தா விளையாடியுள்ளார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

மகா கஞ்சனான டிராவல்ஸ் ட்ரைவர் ரங்கராஜ், தன் வேலையினூடே இரண்டு விஷயங்களை அறிகிறான். ஒன்று, ‘ஹோம்லி ஃபுட்’ விரும்பும் கெவின் என்பவன் லண்டனில் இருந்து வருகிறான்; இரண்டு, மும்பையில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான மாயாவிற்கு மலையாளம் தெரிகிறது. இது இரண்டும் அப்படியொன்றும் பொருட்படுத்தக் கூடிய விஷயங்கள் இல்லை தான், ஆனால் பெர்வர்ட்டான ரங்கராஜ் இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையில் ஊசலாடும் கோட்டினை ஒரு கதையின் மூலம் நிரப்புகிறான்.

கால் விந்திவிந்தி நடக்கும் உழைப்பாளி ரங்கராஜாக பார்த்திபன் தோன்றியுள்ளார். அதீத கஞ்சத்தனமும், தான் வாழ பிறரைக் கொஞ்சமும் நம்பிடாத முன்னெச்சரிக்கையும் தான் ரங்கராஜின் மூலதனம். தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ள அவனிடம் ஒரு சுயகழிவிரக்கமும், ‘நான் குடிப்பதால் சீக்கிரம் இறந்துடுவேன்’ என்ற பரிதாபக் கேடயமும் உள்ளது. தன் மனதின் குரூரங்களுக்கு எவனொருவனால் சமாதானம் கற்பித்துக் கொள்ள முடிகிறது அவன் தன் சுக போக வாழ்வுக்கு எந்த எல்லைக்கும் செல்வான். ரங்கராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன?

கெவினாக சாந்தனு. ஆடிப் பாடி நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம். பிரபுதேவாவின் கோரியோகிராஃபியில் சரியான நடனமொன்று போட்டுள்ளார். நெருக்கம் காட்டும் மாற்றான் மனைவி முதல் முறையாகத் தொடும் பொழுது, ஆணுக்கு எழும் பரவசத்தை நடனமாக்கியுள்ளனர். அவரை ஏத்திவிடும் நபராக ‘குரு’ சிம்ரன் கெளரவத் தோற்றத்தில் தோன்றியுள்ளார். அதற்காக ‘நன்நன்றி’ என சிம்ரனுக்கு க்ரெடிட் தந்துள்ளார் பார்த்திபன்.

பார்த்திபனின் மனைவி கேரளத்து மோகினியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். முன்பே அஜீத் படத்திலேயே நடித்திருந்தாலும், இதில் அனைவரின் கவனத்தையும் பெறும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். ஆனால், தனது மேடை பாணி பேச்சினைப் போல் சீரியஸற்றதாய் படத்தை முடித்து விடுகிறார். ரங்கராஜுக்கும் மோகினிக்கும் 21 வயது வித்தியாசம். கெவின் அத்தம்பதி வசிக்கும் வீட்டில் தங்க நேர்கிறது. அந்தப் பெரிய வீடு மிக அழகாய் உள்ளதோடு படத்தில் மிக முக்கியமான பாத்திரமாகவும் செயல்படுகிறது.  ஞாபக மறதி நோயால் வாடும் மயூரப்பாவாக வரும் ராமையா கிச்சுகிச்சு மூட்டக் கூட உதவவில்லை.

பார்த்திபன் தொட்டுள்ள கருவை, இயக்குநர் கே.பாலசந்தருக்குப் பிறகு எவரும் தொடத் துணியவில்லை. ஒரு மாற்று சினிமாவுக்கான கருவை, நந்தவனத்து ஆண்டியாய்ப் போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.