Shadow

பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

Payangaramana Aalu

பரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்கக் கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களைச் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்” என்றார்.

இப்படத்தின் பாடல்களுக்கு சுதிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்தியேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

செல்வமனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, கிக்காஸ் காளி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைக்க, செந்தூரப்பாண்டியன், சண்முகம் ஆகியோர் இணை தயாரிப்பைக் கவனிக்கிறார்கள்.

டி.கலியபெருமாள் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, வேலூர், ஆரணி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று உருவாகி வருகிறது.