அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள்.
ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை.
படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்.
மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. ‘பவர் பாலிடிக்ஸ்’ என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் நாயகனை (!?) உயர்த்திக் காட்ட, ரத்தத்தைப் பார்த்ததும் மயங்குபவராக அனுஷ்காவைச் சித்தரிப்பதைத் தவிர்த்திருக்கலாம். இது போன்ற அனுஷ்கா படங்களில், நாயகர்கள் படத்தோடு ஒட்டுவதே இல்லை. ஆனாலும் நாயகன் இல்லாமல் இவர்களால் படத்தை யோசிக்கவே முடியாதது துரதிர்ஷ்டம். சமூக அக்கறை உள்ளவரான உன்னி முகுந்தனின் பாத்திரம் நன்றாக உள்ளது என்ற போதிலும், பஞ்சும் நெருப்பும் பத்திக்கத்தான் செய்யும் என்ற அரத பழசான விதியின் படி அனுஷ்காவிற்கு உன்னி மீதான காதல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே உறுத்துகிறது.
அசிஸ்டென்ட் கமிஷ்னராக வரும் முரளி ஷர்மா தனது பாத்திரத்தை மிக நிறைவாகச் செய்துள்ளார். ஆந்திர பாகமதி, கேரளாவிலும் ஹிட்டடிக்க வேண்டுமென, ஜெயராம், உன்னி முகுந்தன், பாபநாசம் புகழ் ஆஷா சரத் போன்ற மலையாள நடிகர்களைப் படத்தில் இறக்கியுள்ளனர். இப்படம், தமிழிலும் தெலுங்கிலும் பை-லிங்குவல் படமாக எடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டாலும், சில காட்சிகளில் உதட்டசைவு பொருந்தாததோடு, வாயசைப்பிற்குப் பின் வசனங்கள் வருவது இன்னும் எரிச்சல்.
ஒரு காட்சியில், அனுஷ்கா ஒரு பெரிய மரக்கதவைத் திறக்கும் பொழுது, கதவில் இருந்து ஓர் உலோகக் கை சட்டென வெளியில் வரும். தமனின் பின்னணி இசையில், அந்தக் காட்சி ஹாரர் படத்திற்கான சரியான பாதிப்பைப் பார்வையாளர்கள் மீது ஏற்படுத்துகிறது. தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம்.
பாகமதி கோட்டை, கோட்டையின் உள்ளே இருக்கும் ஓவியங்கள் என கலை இயக்குநரின் கைவண்ணம் படத்தின் அமானுஷ்யத்தன்மையைத் தக்கவைக்க உதவுகிறது. மதியின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்திற்குத் துணை சேர்க்கிறது. சில லாஜிக் குறைகள் இருப்பினும், திரைக்கதையை இயக்குநர் G.அஷோக் மிக நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளார். படத்தின் முதற்பாதியைப் பொறுத்துக் கொண்டால், வேகமெடுக்கும் இரண்டாம் பாதி, பேய்ப்படம் என்பதைத் தாண்டி ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தரும்.