சஞ்சய் லீலா பன்சாலி பிரமாதப்படுத்தியுள்ளார். ராஜபுத்திரர்களைப் போல் வையகத்தில் வீரம் செறிந்தவர்கள் உண்டோ என்று தான் புகழ் பாடியுள்ளார். இதற்கு ஏன் இவ்வளவு அக்கப்போரும், அராஜக அலப்பறையும்? ஆண்ட பரம்பரை பெருமை பேசி, பள்ளி வாகணத்தைத் தாக்கிய ஸ்ரீ ராஜ்புட் கர்ணி சேணைக்குக் கடும் கண்டனங்கள்.
முத்துக்களைத் தேடிப் போகும் மேவாரின் மகாராஜா ராவல் ரத்தன் சிங், சிங்களத் தீவின் பேரழகி இளவரசி பத்மாவதியை திருமணம் புரிந்து கொண்டு சித்தூர் அழைத்து வருகிறார். பத்மாவதியின் அழகைக் கேள்விப்பட்டு போர் தொடுக்கிறார் அலாவுதீன் கில்ஜி. போரின் முடிவென்ன என்பதே படத்தின் கதை.
13 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் படத்தின் கதை, கண்டிப்பாகக் கவரும் வகையான வரலாற்றுக் காவியம் இல்லை. 15 ஆம் நூற்றாண்டில், சூஃபி கவிஞர் மாலிக் முஹம்மது ஜயாஸி எழுதிய ஒரு புனைவே இப்படத்திற்கான ஆதி மூலம். அசுவாரசியமான திரைக்கதையின் மெத்தனத்தைத் பிரம்மாண்டமான மேக்கிங்கின் மூலம் சஞ்சய் லீலா பன்சாலி ஈடு செய்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
படத்தின் நீளம் அயர்ச்சி தராமல் இருப்பதற்கு மூன்று காரணங்கள் தான். ஒன்று, படத்தில் காட்டப்படும் குகை, அரண்மனை உட்புற அரங்குகள், கம்பீரமான சித்தூர் கோட்டை என வசிகரீக்கும் விஷூவல்கள். இரண்டு, அலாவுதீன் கில்ஜியாக அசத்தியிருக்கும் ரன்வீர் சிங். நெருப்புக் கோழியோடு அவர் அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி, கடைசி ஃப்ரேம் வரை அதகளம் புரிகிறார். மாலிக் கபூரின் விசுவாசத்தைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் பொழுதும், “உனக்கு சுன்னத் செய்யணும்” என ராகவ் சேத்தனைப் பதற விடும்பொழுதும், வாசனைத் திரவியத்தைப் பணிப்பெண் மீது தெளித்து அவளைக் கட்டி பிடித்துக் கொள்ளும் பொழுதும், பத்மாவதியின் பிம்பத்தைச் சரியாகக் காண முடியாமல் தவிக்கும் பொழுதாகட்டும், எதிரியை முதுகில் குத்தும் பொழுதாகட்டும் ரன்வீர் சிங் திகட்டத் திகட்ட ரசிக்க வைக்கிறார். படத்தை அவருக்காக மட்டுமேனும் கண்டிப்பாகப் பார்க்கலாம். மூன்று, வசனங்கள். ராகவ் சேத்தனுக்கும், பத்மாவதிக்கும் இடையேயான உரையாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். தமிழ் டப்பிங் வசனங்கள் நன்றாக இருப்பதோடு, இம்சிக்காமல் பொருந்தவும் செய்கிறது. “கரை புரண்டோடுதே கனா!” எனப் பாடல் வரிகள் கூட அசத்தல். இந்தப் படத்திற்கு 3டி அநாவசியம் என்ற போதிலும், நெருப்புக் கோழியோடு வரும் காட்சியிலும், சித்தூர் கோட்டை தகர்க்கப்படும் பொழுதும் மட்டும் 3டி எஃபெக்ட்ஸைப் பரிபூரணமாக உணர முடிகிறது.
அலாவுதீன் கில்ஜி அளவிற்கு, வேறெந்த கதாபாத்திரத்தை இயக்குநர் ரசித்து உருவாக்கியதாகத் தெரியவில்லை. பத்மாவதியாக தீபிகா படுகோனேவோ, ரத்தன் சிங்காக ஷாகித் கபூரோ, மாலிக் கபூராக நடித்திருக்கும் ஜிம் அளவுக்குக் கூட ஈர்க்கவில்லை.
சதி எனும் பிற்போக்குத்தனத்தை ஆதரிப்பதல்ல நோக்கம் என டிஸ்க்ளெயிமர் போட்டுள்ளனர். அதனாலோ என்னவோ பத்மாவதி அத்தகைய முடிவு எடுப்பது சரி தான் என்ற எண்ணமோ, பதற்றமோ ஏற்படாதளவு திரைக்கதை அமைத்திருப்பனர் போல! இது போன்ற ரணகளமான க்ளைமேக்ஸ் இயக்குநர் பாலாவிற்குக் கிடைத்திருந்தால், மன உளைச்சலில் இருந்து விடுபட மாதக்கணக்கில் ஆகியிருக்கும். போனோமா, படத்தைப் பார்த்தோமா, ‘ரைட், நெக்ஸ்ட்’ என அன்றாடத்தில் மூழ்க முடியுமளவில் க்ளைமேக்ஸ் இருப்பது மிகப் பெரிய ஆறுதல்.
படத்தில் ஹீரோவிற்கும் வில்லனுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இருவருமே பத்மாவதியைப் பொத்தி வைக்கவேண்டும் என்றும், எந்த ஆணின் கண்களும் அவள் மீது பட்டுவிடக் கூடாதென சர்வ ஜாக்கிரதையாக உள்ளனர். சிங்களத் தீவில் இருந்திருந்தால், காட்டில் ஓடி ஆடி மான்களை வேட்டையாடிச் சுதந்திரமாய் இருந்திருப்பார். சித்தூர் கோட்டையில் சிறைப்பட்டதை போல், டெல்லியிலும் சிறைப்படணுமா என்று பத்மாவதிக்கு உள்ளூறத் தோன்றியிருக்கலாம். அதற்காக?
இந்த ராஜபுத்திரர்கள் இயல்பிலேயே அவ்வளவு கொடுமைக்காரர்களாகத் தெரியவில்லை. சிங்கள இளவரசியாக இருந்த பத்மாவதி தான், ராஜபுத்திரப் பெண்களை உசுப்பி, முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறுமிகள் என அத்தனைப் பேரையும் “மூளைச் சலவை” செய்து தீயிற்கு இரையாக்கி விடுகிறார். இன்னும் அந்தத் தீ அங்கு அணையவில்லை என்பதே துரதிர்ஷ்டம்.