ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் “தொட்ரா”. இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவைப் பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச் சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார். அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்குக் கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்” என வாழ்த்தினார்.