
“ரசிகர்களும் தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான். கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக் கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலைகளும் செய்வதற்குக் கணவனுக்குப் பழகிவிடும். அப்படித்தான் போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப் போக ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும். நல்லவேளையாக சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” எனக் கூறினார் ‘தொட்ரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு. உத்தமராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
“தொட்ரா என்றால் என்ன? இந்தத் தலைப்பிற்கு என்ன அர்த்தம்? ‘முந்தானை முடிச்சு’ படத்துல, முருங்க்கைக்காய் சாம்பார் சாப்பிட்டுட்டு நாயகி நாயகனைத் தொடச் சொல்லிக் கூப்பிடுவாங்களே! அதுவா? இல்லை. ‘இது நம்ம ஆளு’ படத்துல, நான் ஆளான தாமரை எனத் தொடச் சொல்லிக் கூப்பிடுவாங்களே! அதுவா? இல்லை. ‘முடிஞ்சா என்னைத் தொட்டுப் பாரு!’ எனச் சொல்லும் கம்பீரமான தலைப்பு” என்று நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜை மேடையில் வைத்துக் கொண்டே படத்தின் தலைப்பிற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார் பேரரசு.
தொட்ரா படம், ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.