Shadow

பிக்பாஸ் 3 – நாள் 8

வழக்கமான பாடலுடன் ஆரம்பித்தது. லாஸ்லியா, மது இரண்டு பேரைத் தவிர பெரிதாக யாரும் ஆர்வத்தோடு ஆடுவதில்லை. மீரா தியானம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. சாண்டி பக்கத்தில் அமர்ந்து, “என்ன கருமம்டா இது” என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்.

நேத்து பிரச்சினையின் போது, ‘நீ தமிழ்பொண்ணு தானே? ஏன் புடவை கட்டாம மாடர்ன் ட்ரெஸ் போட்ருக்க?’ என சாக்‌ஷி கேட்டதாலா அல்லது இல்ல தற்செயலா எனத் தெரியவில்லை; மது புடவையில் இருந்தாங்க. அதில்லாமல் மெளன விரதம் வேறு. இந்த மெளன விரதத்தை நேத்து இருந்திருக்கலாம் என சாண்டி கலாய்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் சாக்‌ஷிக்கு தற்காப்புக்கலை சொல்லி கொடுக்கவேண்டும் என்று டாஸ்க். ஜாலியா இருந்தது.

அப்படியே எல்லாரும் ரிலாக்சா உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதே பிக்பாஸ் கிட்ட இருந்து அறிவிப்பு வந்தது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு. எல்லாரும் ரெடியா இருங்க எனச் சொல்ல ஒரே பரபரப்பு. முதல் நபராக அழைக்கப்பட்டதே மதுவை தான். மொத்த லிஸ்ட்டை முதலில் பார்த்து விடலாம்.

மதுமிதா – கவின், ஃபாத்திமா
அபிராமி – மது, மீரா
ஷெரின் – மது, மீரா
கவின் – மது, மீரா
மீரா – அபிராமி, சாக்‌ஷி
ஃபாத்திமா – கவின், சரவணன்
சாண்டி – மது, சேரன்
சாக்‌ஷி – மது, மீரா
வனிதா – மீரா, சேரன்
லொஸ்லியா – மீரா, சரவணன்
ரேஷ்மா – மது, ஃபாத்திமா
சரவணன் – சேரன், ஃபாத்திமா
சேரன் – தர்ஷன், லொஸ்லியா
முகின் – மீரா, சேரன்
மோகன் – சேரன், ஃபாத்திமா

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை மதுமிதாவுக்கு தான் பொருந்தும். ‘எங்கேயோ போன மாரியாத்தா, என் மேல வந்து ஏறாத்தா’ எனத் தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் தலையிட்டு, நல்லது பண்றதாக நினைத்து, நேத்து வாங்கிக் கட்டிக் கொண்டு, இப்பொழுது எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனாங்க. ஒரே வார்த்தை ஓஹோ என வாழ்க்கை அவார்டு தான் கொடுக்கவேண்டும் மதுவுக்கு. மொத்தம் 6 ஓட்டு வாங்கி லீடிங்ல இருந்தாங்க.

பிரச்சினை அபி, மது, ஷெரின் 3 பேருக்கு நடுவுல தான். ஷெரினும், அபியும் மது பேரைச் சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா பக்கத்து இலைக்குப் பாயாசம் என்கிற மாதிரி கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, சாண்டி எல்லாரும் நேத்து பிரச்சினையைக் காரணமா சொல்லியே மது பேரைச் சொன்னது தான் நெருடல்.

நம்மைச் சுத்தி இருக்கற பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான். ஒரு சின்ன தப்பு நடக்கற வரைக்கும் காத்துக் கொண்டிருந்து, அந்தத் தப்பை நாம செய்த உடனே, கூட்டமாகச் சேர்ந்து அடித்து காலி பண்றதுக்குத் தயாராக இருப்பாங்க. இரண்டு காரணம், ஒன்று அடுத்தவர்களைப் பார்த்து கை நீட்டறது ரொம்பச் சுலபம், இரண்டாவது அப்படிச் செய்யறது மூலமாகத் தன்னை நல்லவனாகக் காண்பித்துக் கொள்ளலாம். ‘நான்லாம் அப்படி இல்லப்பா!’ என சீன் போட்டுக்கலாம். இத்தனைக்கும் நேத்தே அபி, ஷெரின்கிட்ட மன்னிப்பும் கேட்டாங்க மது.

எதிர்பார்த்தது போலவே, அதிகமாக உச்சரிக்கப்பட்ட இன்னொரு பெயர் மீரா. அபி, சாக்‌ஷி, ஷெரின, கவின் ஆகிய நால்வரும் ஓரணியாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். அது அப்பட்டமா நேற்று தெரிந்தது. ஆனால் இந்த நிலைக்கு முக்கிய காரணமே தன்னோட எடுத்தெரிந்து பேசும் குணம் தான் என மீரா புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது.

மீராவோட சொன்ன பெயர் அபி, சாக்‌ஷி. ‘வெளியே தொழில் ரீதியாக நடந்த விஷயத்தை உள்ள பேசி எனக்குக் கெட்ட பேர் வாங்கி தராங்க’ எனக் காரணம் சொன்னாங்க மீரா. ஏம்மா நேத்து சேரன் இதையே தானே சொன்னாரு? அப்படியெல்லாம் இல்லவே இல்லை எனச் சொல்லி அவரை நோஸ்கட் பண்ணிட்டு அடுத்த நாளே இப்படி பேசறதுக்கெல்லாம் ஒரு குருட்டுத்தனமான முட்டாள்த்தனம் வேணும்.

‘நான் பாட்டுக்கு சிவனேன்னு தான்டா இருக்கேன், என் பேரை ஏண்டா சொன்னிங்க?’ என சேரன் கேட்க விரும்பினால், சாண்டி, வனிதா, முகின், சரவணன், மோகன் ஆகியோரிடம் கேக்கலாம்.

தர்ஷன் பேரையும், லொஸ்லியா பேரையும் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார் சேரன். அந்த வீட்டில் இருக்கும் முகங்களுக்கிடையே, குழந்தைகள் மாதிரி இருக்கற இந்த ரெண்டு பேரும் வேணாம் எனச் சொன்னது வித்தியாசமாக இருந்தது.

ஒரு வழியாக நாமினேஷன் முடிந்து, லிஸ்ட்டை பிக்பாஸ் அறிவிச்சாரு. அதைப் பத்திக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்படி இவங்க பேரு வந்தது என ஆச்சரியபட்டதைப் பார்க்க முடிந்தது.

அப்புறம் ஆக்டிவிட்டி ஏரியாவில் நான்கு அணியாகப் பிரிந்து ஒரு கேம் விளையாடினார்கள். அதில் எதுவும் புது சண்டை வரவில்லை. இரவு எல்லாரும் ஜாலியாக உட்கார்ந்து பாட்டு பாடி நடனமாடிக் கொண்டிருந்த போது, லைட் ஆஃப் ஆக ஆரம்பித்தது. சரி அவ்வளவு தான் எனநினைக்கும் போது அபி, சாக்‌ஷி, ஷெரின் 3 பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது நாமினேஷன் முடிந்து பிக்பாஸ் பேர் சொல்லும்போது சேரன் பேர் வந்ததுக்கு அபி ரொம்ப ஆச்சரியபட்டாங்களாம். மூன்று தடவை, ‘சார் நீங்களுமா?’ எனக் கேட்டார்களாம். ஆனா சாக்‌ஷி பேர் சொன்ன போது எந்த ரியாக்சனும் கொடுக்கலையாம். ‘அப்ப நான் உனக்கு முக்கியம் இல்லையா?’ என அபியை மடக்கினார்கள். அபி கொடுத்த ரியாக்‌ஷனில், ‘எப்படிச் சிக்கிருக்கேன் பார்த்தியா?’ என வடிவேலு தான் தெரிந்தார்.

இந்தப் பெண்களின் உலகம் தான் எவ்வளவு அழகு?

வித்தியாசமான காரணம் சொல்லி ஸ்கோர் பண்ணின சேரனுக்கு ஷொட்டு;

கூட்டத்தில் கோயிந்தா போட்ட கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, சாண்டிக்குக் குட்டு;

ஆட்டத்தைச் சூடு பிடிக்க வைத்த  பிக்பாஸ் ஹிட்டு.

மகாதேவன் CM