Shadow

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

Director-Sathish-karna

அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்த்திபன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குநர் என்றும் பேர் போட்டுக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து, மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

“இது என்ன மாதிரியான திருட்டு வேலை?” என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குநர். ஒரு படத்தை இயக்குவது என்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து உழைக்கும் இயக்குநருக்குக் இப்படிப்பட்ட அநியாயம் நிகழ்ந்தது மிகப்பெரும் கொடுமை.

தயாரிப்பாளரிடம் இயக்குநர் விளக்கம் கேட்டதற்கு, “இயக்குநர் பாலா ரீமேக் பன்ன படத்தில் இருந்து பாலாவையே தூக்கிப் போடலியா?” என பதிலுரைக்கிறார். அப்படக்கம்பெனி பாலாவைத் தூக்கிவிட்டு, அவர் இயக்கிய ஒரு காட்சியைக் கூடப் பயன்படுத்தவில்லை என்ற சிறிய லாஜிக்கைக் கூடப் பொருட்படுத்தாமல் எரிச்சல் மூட்டுகிறார் தயாரிப்பாளர் மனோ பார்த்திபன்.

‘அர்ஜுன் ரெட்டி’யின் கதை உரிமை தயாரிப்பாளரிடம் உள்ளது. ஆனால். ‘டைம் இல்ல’ படத்தைப் பொறுத்தவரை அது இயக்குநரின் உழைப்பு. இப்படி அடுத்தவர் உழைப்பையும் அறிவையும் குற்றவுணர்வின்றித் திருடும் கும்பல் ஒன்று, கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மை அறியாமல், அறிவைத் திருடும் கும்பலுக்குப் பிரபல இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு கொடுத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இதில் நகைமுரண் என்னவென்றால், டி.ராஜேந்திரன் “உயிருள்ள வரை உஷா” படம் இயக்கி முடித்த போது, அவருக்கும் இதே போல சிக்கல் வந்தது. பல போராட்டத்துக்குப் பின் தான் இயக்குநர் அடையாளமே அவருக்குக் கிடைத்தது. வேறெவரையும் விடக் கண்டிப்பாக டி.ராஜேந்தருக்கே அவ்வலி சரியாகப் புரியும்.

தயாரிப்பாளர் நடிகர் மனோ பார்த்திபன் எந்தச் சமரசத்திற்கும் வராததால் வேறு வழியின்றித் தனது அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள முறைப்படி, சென்சார் போர்டு, கில்டு சங்கம், காவல்துறை என அனைத்து இடங்களிலும் இயக்குநர் சதீஷ் கர்ணா புகார் கொடுத்திருக்கிறார்.