சமீபமாகக் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என தைரியமாக இப்படத்தினைச் சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி எனத் தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார்.
ஒரு கொலை நடக்கிறது, அதனைப் பற்றிச் சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்கின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான்.
இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி, ஏழை மக்களது வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்குச் சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான்.
எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கைத் தொடங்குகிறான். படம் பார்த்துக் கொண்டு இருப்போரை கதையோடு ஒன்ற செய்து, தான் நினைக்கும் விதத்தில் பார்வையாளர்களை யோசிக்க வைப்பதில் தான் ஒரு இயக்குநரின் திறமை இருக்கிறது.
முக்கியமாக கொலை இப்படி நடந்திருக்கும் எனச் சொல்கிற காட்சியில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.
நிறைய துப்பறியும் படங்களில் கதாநாயகனை அறிமுக காட்சியில் சோம்பலாக, ஒழுங்கற்ற அறையில் இருப்பது போல் காட்டி இருப்பார்கள் (அறிவாளியாம்). ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனது அறிமுக காட்சியிலேயே இந்த வழக்கை நாயகன் எப்படிக் கொண்டு செல்வான் என பார்வையாளனைத் தயார்ப்படுத்தி விடுகிறது படத்தின் திரைக்கதை.
அதுவும் வழக்கைப் புரிந்துகொள்ளும் காட்சி, கடைசியில் வரும் சுய விளக்க காட்சி எல்லாம் மிகவும் ரசிக்கவைக்கிறது. ஆரம்ப பெயர் சான்றுகள் (Title card), பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் படத்தின் பார்வையாளனைக் கதையோடு ஒன்றிப் போகச் செய்கின்றன.
எம்.ஜி.ஸ்ரீனிவாஸ். படத்தின் இயக்குநரும் கதாநாயகனும் இவர் தான். குறும்பட அலையில் இருந்து கன்னடத் திரையுலகில் வந்திருக்கும் முத்து. திரைப்பட இயக்குநராகுவதற்கு முன்பே தனது திறமைகளை நிரூபித்தவர். ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளர். இவரது முதற்படமான ‘ஸ்ரீனிவாஸா கல்யாண’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று.
முதல் படத்தில் வாழ்வியல் தத்துவத்தை எடுத்தவர், துப்பறியும் கதையை இரண்டாம் படமாக எடுத்திருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் இவரது அடுத்த படமான OLD MONK (பழைய சந்நியாசி), புராணத்தில் வரும் நாரதர் நவீன காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் அதன் கதை. அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு தூண்டியுள்ளது இப்படம்.
– மேவி