புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய ‘அமரோஸ் ஃபெரோஸ்’, ’21 கிராம்ஸ்’ ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.
பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் வந்த சூப்பர் டீலக்ஸ் போல!
திரைப்படம், பைபிளில் கூறப்படும் ஒரு நாட்டார் கதையுடன் துவங்குகிறது. முன்பெல்லாம் மனிதர்கள் உலகம் முழுக்க ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்தனர். நோவாவின் வழித் தோன்றலான பாபிலோன் என்பவர் கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு மனிதர்கள் எல்லாரும் போவதற்காகப் பூமியிலிருந்து வானத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக உயரமான கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார். கடவுளுக்கு இதில் விருப்பமில்லை. கட்டடத்தைக் கட்டும் முயற்சியைத் தடுக்க நினைத்த கடவுள், அந்தக் கட்டடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பேசிக் கொள்ளும் மொழி, அவர்களுக்கிடையே புரியாமல் போவது போல மாத்தி விட்டுவிடுகிறார். ஒருவர் பேசும் மொழி மற்றவருக்குப் புரியாததால், அவர்கள் இணைந்து வேலை செய்யமுடியாமல் போகிறது. குழப்பம் ஏற்பட்டது. இதனால் சொர்க்கத்தை அடையும் கோபுரம் கட்டப்படாமல் பாதியிலேயே நின்று போனது.
அதிலிருந்து கிளைத்த சொல் தான் பேபல். பேபல் என்றால் குழப்பம், மிஸ்-அன்டர்ஸ்டேண்டிங் என்று அர்த்தம். இந்தப் படம், மொராக்கோ, அமெரிக்கா, மெக்ஸிக்கோ, ஜப்பான் ஆகிய நான்கு தேசங்களில் தனித்தனியாக நிகழும் சம்பவங்கள் கடைசியில் எப்படி இணைந்து, ஒன்றுக்கொன்று தொடர்பாகிறது என்பதை விவரிக்கிறது. உலகின் அனைத்து நிகழ்வுகளும் தற்செயல்களின் கூட்டு என்பதை உணர்வுபூர்வமாக விளக்கும் படம். ஒரு சாதாரண துப்பாக்கிச் சூடு எப்படி நான்கு தேசங்களில் இருக்கும் நான்கு வெவ்வேறு குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கிறது என்பதை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் ஒரு தம்பதியர். அவர்களுடைய மூன்றாவது குழந்தை இறந்த சோகத்தை மறக்க, ஆஃப்ரிக்காவின் மொராக்கோ தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் டூரிஸ்ட்டாக பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அவர்களது இரண்டு குழந்தைகளை அவர்களின் மெக்ஸிக்கோ நாட்டு பணிப்பெண் கவனித்துக் கொள்கிறாள். இந்தப் பணிப்பெண், மிக அன்பான, பொறுப்பான பெண்மணி. ஆனால், இவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிக்கிறார். மெக்ஸிக்கோவில் அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தனது ஓனர்கள் வந்ததும் ஊருக்கு செல்லலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.
மொராக்கோவின் ஒரு வறண்ட கிராமத்தில் ஒருவர், அந்தக் கிராமத்துக்கு வேட்டையாட வந்திருந்த ஜப்பானியருக்கு வேட்டையில் உதவி செய்கிறார். அந்த ஜப்பானியர் தனது துப்பாக்கியை அந்த மொராக்கோகாரருக்குப் பரிசளிக்கிறார். இந்தத் துப்பாக்கியை ஊரில் ஆட்டுமந்தையை மேய்த்துவருபவர் ஒருவர் நரிகளை விரட்ட விலைக்கு வாங்கிக் கொள்கிறார். அவரது பையன்கள் மலைமேட்டுக்கு ஆட்டுமந்தையை ஓட்டிச் சென்று அவற்றை மேய்த்து வருகிறார்கள்.
ஒரு நாள், அப்பையன்கள் துப்பாக்கியை வீட்டில் தங்களின் அப்பாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்து, அதனைச் சுட்டால் எவ்வளவு துரம் வெடிக்கும் என்று விளையாட்டாகச் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சுடும் ஒரு குண்டு, தொலைவில் போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸில் உள்ள அமெரிக்கப் பெண்ணைத் துளைத்து விடுகிறது. அந்தப் பெண், முதல் பாராவில் பார்த்த குழந்தையைப் பறிகொடுத்த பெண். சுடப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவி அமெரிக்கர்களுக்கு எதிரான மொராக்கோ தேசத்தின் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சம் பரவி, இரண்டு தேசத்தின் மானப்பிரச்சனையாக மாறுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடம் ரிமோட் ஏரியா என்பதால் மருத்துவ உதவிகள் வந்து சேரக் காலமெடுக்கிறது. அடிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உள்ளுர் கிராமத்தில் முதலுதவி தரப்படுகிறது.
இதற்கிடையில் தன் மகனின் திருமணத்துக்குப் போகவேண்டிய கட்டாயம் அந்தப் பணிப்பெண்ணுக்கு வந்துவிடுகிறது. வேறு யாரும் அந்தக் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கிடைக்காததால் தானே அந்தக் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு மெக்சிக்கோ பயணமாகிறார். திருமண நிகழ்வு முடிந்து மீண்டும் சான்டியாகோ திரும்பும் போது, அமெரிக்கப் போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் அந்தக் குழந்தைகளைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்.
டோக்யோவில் டீன்-ஏஜ் பெண், காது கேட்காத, பேசமுடியாத மாற்றுத்திறனாளி. தாழ்வு மனப்பான்மை கொண்டவர். அவரது அம்மா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதால் இன்னும் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார். அவரது தந்தை ஒரு காலத்தில் பரிசளித்த துப்பாக்கி தான் மொராக்கோவில் தற்போது பிரச்சனையாயிருக்கிறது. அவரைத் தேடி ஜப்பானியப் போலீஸ் விசாரணைக்கு வருகிறது.
இந்த நான்கு நிகழ்வுகளும் சங்கமிக்கும் தன்மையே க்ளைமாக்ஸாக விரிகிறது. அற்புதமான படம். அரசு அமைப்பின் அதிகாரம், ஊடகங்களின் பொறுப்புத்தன்மை, சகமனிதர்களின் மீதான நம்பிக்கையின்மை, எளிமையான மனிதர்களின் அன்பு, வெகுளித்தனம் என போகிற போக்கில் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகம் முழுக்க இருக்கும் மக்களின் தேவையும், எதிர்பார்ப்பும் ஒரே விதமாகத் தான் இருக்கிறது. நிலங்கள் எல்லைகளால் பிரிக்கப்பட்டு அதிகார அடுக்குகளின் திணிப்பால் மக்கள் வேறுபட்டு இருக்கிறார்களே தவிர, உள்ளத்தால் யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்கிறது இந்த வட அமெரிக்கப் படம்.