“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி” என்போம் இல்லையா? அது போல ‘மகத்தான சல்லிப்பயல்’ என்கிறார். நம் எல்லோருடைய மனதிலும் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, சுற்றியிருப்பவரையும் கருகச் செய்கிறது.
அப்படிப்பட்ட ஈகோவால் தானும் கஷ்டப்பட்டு, சுற்றி இருப்பவர்களையும் சங்கடமாக்கும் இரண்டு நபர்களைப் பற்றிய லெபானியப் படமே The Insult (2017). இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அய்யப்பனும் கோஷியும் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய தேசங்களை உள்ளடக்கிய பகுதி. உலகின் சபிக்கப்பட்ட பூமி. எங்கிருந்தோ, யாரோ இயக்கும் அதிகாரவர்க்கத்தின் சூட்சும கயிறுகளுக்கு, இந்த தேசங்களில் வாழும் எளிய மக்களின் அன்றாட வாழ்வு நரகமாகி இருக்கிறது. குறிப்பாகப் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக மத்திய தரைக்கடல் நாடுகள் எல்லாவற்றிலும் துரத்தி அடிக்கப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலுடைய ராணுவ அமைச்சராக இருந்த ஏரில் ஷரோன் ராணுவத்தை பயன்படுத்தி, 1980களில் பாலஸ்தீனியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கிறார். லெபனானில் நடந்த நீண்ட கால சண்டை, போராட்டத்துக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக கன்டெய்ன்மென்ட் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். உள்ளூர் லெபனானிய மக்களுக்கு இவர்கள் மீது எரிச்சல். அது அடிக்கடி கலவரத்தில் முடிவதுண்டு.
டோனி, ஒரு லெபனானியக் குடிமகன். கர்ப்பமாயிருக்கும் தன் மனைவியுடன் இணைந்து, நகரத்தில் ஆட்டோமொபைல் வொர்க்-ஷாப் நடத்தி வருகிறார். நல்ல மனிதர்தான். ஆனால், கொஞ்சம் முன்கோபக்காரர். பாலஸ்தீனியர்கள் மீது வெறுப்பு உள்ளவர். ஒரு நாள் அவரது வீட்டின் பால்கனியில் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது, அந்தத் தண்ணீர் கீழே தரையில் கொட்டுகிறது. அந்தப் பகுதியின் மெயின்டனன்ஸ் வேலைகளை சூப்பர்வைஸ் செய்து வரும் யாசர் மராமத்து பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். யாசர் ஒரு பாலஸ்தீனிய அகதி. அவர் மீது டோனியின் பைப் தண்ணீர் கொட்டுகிறது.
வெளிப்படையாக தண்ணீரை சாலையில் கொட்ட வைப்பது சட்டப்படி தவறு என்பதால் யாசர், டோனியின் வீட்டுக்குச் சென்று பைப்பை சரி செய்யனும், கீழே தண்ணீர் கொட்டுகிறது என்கிறார். டோனி, பாலஸ்தீனிய அகதிகள் மேல் கொண்ட வெறுப்பால் யாசரை வீட்டுக்குள் விட விரும்பவில்லை. ‘தண்ணீர் கொட்டுதுன்னா ஓரமா போ’ எனக் கிண்டலடித்து அனுப்பிவிடுகிறார். யாசர், தனது வேலையாட்களை வைத்து வெளிப்புறமாகவே ஏணி போட்டு தண்ணீர் கொட்டும் அந்தத் துளையை அருகில் இருக்கும் ட்ரயினேஜ் பைப்புடன் கனெக்ட் பண்ணுகிறார். பால்கனியில் இருந்து இதனைப் பார்த்த டோனி, ஜாயின்ட் பண்ண பைப்பை சுத்தியல் எடுத்து உடைத்து எறிகிறார். யாசர், டோனியை அசிங்கமாகத்ஃ திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறார்.
டோனி, தன்னைத் திட்டிய யாசர் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என யாசருடைய கம்பெனிக்கு வந்து அதட்டுகிறார். யாசர், தான் டோனிக்கு உதவி தான் செய்ததாகவும், செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது எனவும் சொல்கிறார். இருவருக்கும் இடையே மோதல் வலுக்கிறது. கடைசியில் யாசரின் பாஸ், யாசரை சமாதானப்படுத்தி டோனியிடம் மன்னிப்பு கேட்கக் கூட்டிச் செல்கிறார். அங்கு யாசர் தன்னை விட வயதில் சிறிய ஒருவரிடம், தான் செய்யாத தவறுக்கு எப்படி மன்னிப்பு கேட்பது எனத் தயங்கி கொஞ்ச நேரம் நிற்கிறார். டோனி ஆத்திரமடைந்து, ‘பாலஸ்தீனியர்களே இப்படித்தான். எப்போதும் வாய்ப்பைத் தவறவிடும் வாய்ப்பை மட்டும் தவறவிடுவதே இல்லை (செம வசனம்)’ என்று சொல்லிவிட்டு, “ஏரில் ஷரோன் உங்களை எல்லாம் பூண்டோட அழிச்சிருக்கணும்” எனச் சொல்லுவார். அந்த வார்த்தை யாசரைக் காயப்படுத்துகிறது. தனிப்பட்ட பிரச்சனையில் தன் இனத்தையே அவமானப்படுத்துவதைத் தாங்காத யாசர், டோனியின் வயிற்றில் பலமாகக் குத்திவிடுவார். டோனி, யாசர் அடித்ததற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்.
அடுத்தடுத்து நிகழும் செயல்களால் இரண்டு தனிப்பட்ட நபர்களின் தேவையற்ற ஈகோவும், மூர்க்கத்தனமும் சமுதாயப் பிரச்சனையாக மாறுகிறது. பாலஸ்தீனியர்களும் லெபனானியர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கடைசியில் இந்தப் பிரச்சனை எப்படித் தீர்க்கப்படுகிறது, நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்பதே மிச்ச கதை.
மிகச் சுவாரசியமான கோர்ட் ட்ராமா. வாதங்கள், பிரதிவாதங்கள் என நன்றாக எழுதப்பட்ட வசனங்களுடன் காட்சிகள் ரசிக்க வைக்கும்படி உள்ளது. அந்த நாட்டு அரசியல் தெரியவில்லை என்றாலும் கோர்ட் சீன்களுக்காகப் பார்க்கலாம். யாசராக நடித்தவர் மிகச் சிறப்பான பங்களிப்பு. டோனி மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி இருவரும் மனதைக் கவர்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதைக்களன் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது. நாடுகள் அனைத்திலும் இரண்டு பிரச்சனைக்குரிய சமூகங்கள் இருக்கின்றன. இரண்டுமே தமது பக்க நியாயத்தைப் பேசுகின்றன. அதனை வைத்தே அரசியல் நிகழ்கிறது. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி மனிதம் அனைவருக்கும் பொதுவானது என்பதை உணரத் தொடங்கினால் பேதங்கள் மறைந்துவிடும்.