Search

கடாரம் கொண்டான் விமர்சனம்

kadarm-kondan-movie-review

மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.

2010 இல் வெளிவந்த ‘ஆ பூ போர்தான்த் (À bout portant)’ என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. ‘ஆ பூ போர்தான்த்’ என்றால் “மிக அருகில்” எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு படத்தைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸால் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்திற்கு ‘பாயின்ட் பிளான்க்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என அதற்குப் பொருள். தமிழிலோ, நாயகன் துதி பாடும் தலைப்பாய் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சிறைக்குச் சென்று, வெளியில் வந்து அமைதியாக வாழும் கே.கே.வை ஒரு கொலைவழக்கில் சிக்க வைத்துக் கொல்லப் பார்க்கிறான் வின்சென்ட். கே.கே. எப்படித் தப்பித்துப் பழி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஸ்டைலிஷான மேக்கிங், அதிரடியான சேஸிங் உள்ள படமென்றால், கதாபாத்திரங்கள் நின்று நிதானமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என இயக்குநர் ஒரு விதியை உருவாக்கிக் கொண்டிருப்பார் போல். நல்லவேளையாகப் படத்தின் தொடக்கத்தில், கணவன் மனைவியாக நடித்துள்ள நாசரின் மகன் அபி ஹாசனும், கமலின் மகள் அக்‌ஷ்ரா ஹாசனும் பேசுவது புரிகிறது. மனதில் பதியும் கதாபாத்திரங்கள் இவர்கள் மட்டுமே! கர்ப்பிணியான அக்‌ஷ்ராவை, ஆனியாக நடித்திருக்கும் ஜாஸ்மின் ஜன்னலில் இருந்து தூக்கிப் போட முயலும் பொழுது, அக்‌ஷ்ரா தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார். அந்தப் போராட்டம் மனதில் பதிந்த அளவு கூட, விக்ரமின் ஸ்டன்ட் சாகசங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. அக்‌ஷ்ரா யார், கொல்ல நினைப்பது யார், எதற்குக் கொல்ல நினைக்கிறார் எனப் புரிவதால் ஒரு மெல்லிய பதற்றமாவது எழுகிறது. ‘விக்ரம் ஒரு ஹாலிவுட் ஹீரோ, அடிவாங்குபவர்கள் பற்றியெல்லாம் ஏன் உங்களுக்கு வீண் கவலை?’ என்ற எண்ணத்தில் வைக்கப்படும் காட்சிகள் தான், சூப்பர் ஹீரோயிசம் செய்தும் அவர் மனதில் நிற்காமல் போய்விடுகிறார்.

பாந்தமான முகத்துடன், ஒரு நல்ல கணவனாகப் பொறுப்புள்ள அப்பாவாகக் கவர்கிறார் அபி ஹாசன். விக்ரம் ஒரு பாஸிங் க்ளெவுட் போல் மனதில் பதியாமல் இருப்பதால், அபி ஹாசனைத்தான் படத்தின் நாயகனாகக் கொள்ள வேண்டியுள்ளது. விவேகம் படத்தில் கதாபாத்திரத்திற்குப் பொருந்தியது போல், அக்‌ஷ்ரா ஹாசன் இப்படத்திற்குப் பொருந்தவில்லை. அவரது வயதும் அனுபவமுமே அதற்குக் காரணம் என்றாலும், பதற்றத்தையும் பயத்தையும் கண்களில் தேக்கியவண்ணம் வரும் காட்சிகளில் எல்லாம் அசத்தியுள்ளார்.

வில்லன் வின்சென்ட்டாக விகாஸ் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்குரிய வில்லன் இல்லை என்றாலும், அவர் வசமாகச் சிக்கும்பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், க்ளைமேக்ஸ் காட்சி பார்க்கும் பொழுது, ‘பரவாயில்லைப்பா, நம்மூரில் எல்லாம் திருமண மண்டபம் இருப்பதால், மலேஷியா போலீஸ் ஸ்டேஷன் போல் நம்மூர் போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லாம் என்றுமே மீன் மார்க்கெட் மாதிரி ஆகிடாது’ என்ற திருப்தி எழுகிறது.

நேர்க்கோட்டில் பயணிக்கும் ஓர் எளிய கதை. ஆனால், நாயகன் யாரென்பதையும், கதை என்னவென்பதையும் உள்வாங்க வசனங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அதற்குப் பார்வையாளர்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டியதிருக்கிறது. அதிலும் குறிப்பாக இரண்டு காட்சிகளை வரும் வசனங்களை உள்வாங்கிக் கொண்டால் கூடப் போதும். கதை புரிந்துவிடும். குண்டடிப்பட்ட வின்சென்ட்டின் ஆள் விக்ரமுக்குத் தாங்கள் யாரெனச் சொல்லும் காட்சியையும், காரில் செல்லும்போது விக்ரமின் ஃபைலைப் பார்த்து அவரது பூர்வாங்கத்தைச் செர்ரி மார்டியா கூறும் காட்சியையும் தவறவிட்டால், படம் சுத்தமாகப் புரியாது. விக்ரமை யாரோ, எதற்கோ சுடுகிறார்கள்; அவர் முதலில் ஓடுகிறார்; வில்லன் யாரெனத் தெரிந்து பின் ஸ்டைலிஷாகச் சண்டையிட்டு ஜெயிக்கிறார் என்பதாகக் கதை குத்துமதிப்பாகத்தான் புரியும். ஆக, படம் பார்ப்பவர்களின் அதீத கவனத்தைக் கோருகிறார் இயக்குநர். ஸ்டைலிஷான மேக்கிங்கில் செலுத்திய கவனத்தை, கேகே-வின் கதாபாத்திர வார்ப்பிலும் செலுத்தியிருந்தால், படம் மனதை ஆட்கொண்டிருக்கும்.