நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.
“என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். என்னை இயக்குநர் வசந்த் அழைத்து ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வைத்தார். தம்பியை ஞானவேல்ராஜா தான், ‘நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி நாயகன் ஆக்கினார். அதே போல், பிருந்தாவிற்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அவர் எங்கப்பாக்கு மூத்த மகன் போல். அவருக்கு மிகவும் நன்றி” என்றார் நடிகர் சூர்யா.
“அந்தக் குடும்பத்தில் இருந்து இலட்சுமி சிவகுமாரும், ரஞ்சனி கார்த்தி, இரண்டு பேரும் தான் திரைத்துறைக்கு இன்னும் வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்துட்டாங்க” என்றார் மிஸ்டர் சந்திரமெளலி இசை வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜெகன்.
“எனக்கு சிவகுமார் சித்தப்பா மாதிரி. அவரோடு படங்கள் நடிச்சிருக்கேன். நான் சூர்யா கூட, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிச்சுட்டேன். கார்த்தி கூடவும் நடிச்சிருக்கேன். அது இன்னும் ரிலீஸ் ஆகலை. இப்போ, அவரது மகள் நான் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கார் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. உண்மையில் பிருந்தா பாடியிருக்காங்க என்பது நேத்துதான் தெரியும். குரல் ரொம்ப நன்றாக இருக்கு. இதை நான் மனபூர்வமா மனதில் இருந்து சொல்றேன்” என பிருந்தாவை வாழ்த்தினார் ‘நவரச நாயகன்’ கார்த்திக்.