Shadow

Bro Daddy விமர்சனம்

தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும்.

மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது.

லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் “சாய் வித் சித்ரா” பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா நுணுக்கங்களைத் தேடிக் கற்கும் கலைஞர் என்று குறிப்பிட்டார். அதையெல்லாம் இப்போது நாம் பார்க்க முடிகிறது.

லட்டு மோகன்லாலுக்கு லட்டு மாதிரி ஒரு பாத்திரம். படத்தின் ஆரம்பப் பாடலை,

இருவரும் பாடித் தொடங்குவதில் இருந்தே எதிர்பார்ப்பைத் தக்க வைத்திருக்கிறார்கள்.

‘அடப்பாவிகளா! மீனாவை பிருதிவிக்கு அம்மா ஆக்கிட்டீங்களே?’ என்று ஃபேஸ்புக்கைக் கொளுத்தாத குறையாகப் போராடிய 90’ஸ் கிட்ஸ் கூட படம் பார்த்ததும் அடங்கி விடுவார்கள். கல்யாணி பிரியதர்ஷனுக்கு லட்டு மாதிரி படங்கள் வாய்க்கின்றன. இந்தப் படம் போல இன்னும் நூறு கொடுக்கலாம்.

கல்யாணி பிரியதர்ஷனின் தந்தையாக வரும் லாலு அலெக்ஸிற்கு, இது வாழ் நாள் பெயர் சொல்லும் பாத்திரம். பிருதிவிராஜின் பாட்டியாக வரும் அவரின் நிஜ அம்மா மல்லிகா சுகுமாரன் கொஞ்ச நேரமே வந்தாலும் அதகளம்.

“பவித்ரம்” என்றொரு மலையாளப் படம். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர். இவர்களின் பெற்றோர் திலகன் & ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் முதுமைக்கால இச்சையின் விளைவு குழந்தையாக வந்து ஊர் எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்.

தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால். இந்தப் படத்தில் மோகன்லால் நடித்த போது அவருக்கு வயது 34. ஆனால் மனுஷர் வாழ்ந்து காட்டியிருப்பார். மோகன்லாலின் நடிப்பை உச்சமாகப் போற்றும் ஏராளம் படங்கள் இருந்தாலும் இந்தப் படம் கொடுத்த பாதிப்பு தனி.

பவித்ரம் படத்தில் மையப் புள்ளியை இன்னொரு கோணத்தில் ஜாலியாகக் காட்டி, கருக்கொள்ளும் குழந்தையின் தேவையை நச்சென்று ஒரு வரியில் காட்டி விட்டுக் கடக்கும் ‘ப்ரோ டாடி’ ஒரு சுகானுபவம். 😀😍❤️

கானா பிரபா