Shadow

புரூஸ் லீ விமர்சனம்

நாயகனின் பெயர் ஜெமினி கணேசன். பயங்கரமான பயந்தாங்கொள்ளி. திரையில் ஒரிஜினல் புரூஸ் லீ நடித்த படம் பார்த்தால் மட்டும் சிறுவன் ஜெமினி கணேசனுக்கு லேசாகத் தைரியம் வர மாதிரி இருக்கே ‘அடடே..!’ என அவனது அம்மா புரூஸ் லீ எனப் பெயர் அழைக்கிறார். ஆனாலும் நாயகனுக்கு தைரியம் மட்டும் வந்தபாடில்லை.

புரூஸ் லீக்கு தைரியம் வராவிட்டால் என்ன? சரோஜா தேவி மீது காதல் வந்து விடுகிறது. முகத்திற்கு பெளடர் போட்டுக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடும் சரோஜா இல்லை, பயந்து நடுங்கும் நாயகனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்லும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

படம் தொடங்கும் பொழுது வரும் டிஸ்க்ளெயிமர் சுவாரசியத்தைக் கூட்டுவதாக உள்ளது. ‘சில படங்களில் இருந்து திருடியும் உள்ளோம்’ என்பதே அது. அந்தச் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் விதமாக முனீஷ்காந்த் படத்தில் வில்லனாக வருகிறார். இது சீரியசான ஸ்பூஃப் மூவியா அல்லது முழு நீள காமெடிப் படமா(!?) என்று முடிவிற்கு இறுதி வரையிலுமே வர முடியவில்லை.

முனீஷ்காந்த்க்கு ஹோலிவுட்டில் நம்பியார் போல் பெரிய வில்லனாக வேண்டுமென ஆசை. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து டானாகி விடுகிறார். ஆம், தமிழ்ப்படத்தனமாக ரெளடியோ தாதாவோ இல்லை. காட்ஃபாதராகவே மாறிவிடுகிறார். மர்லான் பிராண்டோ போல் கோட் சூட் அணிந்து பூனையை மடியில் வைத்திருக்கிறார், ஜோக்கர் (டார்க் நைட் ரைசஸ்) போலும், சா (Saw) படத்து வில்லன் போடும் மாஸ்க் அணிந்தும் வருகிறார் முனீஷ்காந்த். திருடியது தான் திருடினார், கதாபாத்திரங்களை மட்டும் இல்லாமல் சுவாரசியமான கதையையும் சேர்த்துத் திருடியிருக்கலாம்.

காட்ஃபாதர், சரோஜா தேவியைக் கடத்தி விடுகிறார். புரூஸ் லீ எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

படத்தின் ஒரே ஆறுதல், க்ளைமேக்ஸில் வரும் ஆனந்த்ராஜ் தான். ‘வாயில் வாழைப்பழத்தைச் சொருகத்தான் வந்தேன்’ என்றவர் சொல்லும் கதையில், துப்பாக்கியால் தவறாக ஜட்ஜைச் சுட்டுவிட்டேன் எனச் சொல்லும் ஒப்புதல் வாக்குமூலம் முரணாக உள்ளது. படத்தில் நாயகனுக்குக் கொலைக்கான  ஓர் ஆதாரம் கிடைக்கிறது. அதை யாரிடம் தரலாம் என நாயகன் குழு யோசிக்கும்பொழுது, ‘சுசித்ராவிடம் தந்துடலாமா?’ என சமயோசிதமாக ஒரு வசனத்தை வைத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கிற்காகப் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக படம் தொடங்கும் முன் நன்றியும் சொல்லுகின்றனர்.

புரூஸ் லீயாக ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார். படத்தில் தான் பயங்கொள்ளி. ஆனால், நிஜத்தில் அசாத்திய மன தைரியம் கொண்டவர் என்பதை அவர் நடிக்கும் படங்களைப் பார்த்தாலே புரியும். எந்த நாயகனும் செய்யத் தயங்கும் பாத்திரங்களைச் செய்கிறார் என்றது ஒருபுறம் என்றாலும், சக கதாபாத்திரங்களால் தன்னை சுய எள்ளலுக்கும் திரையில் உட்படுத்திக் கொள்கிறார். நின்றால், நடந்தால், தலைமுடி அசைந்தாலும் பின்னணி இசையின் உபயத்தில் நாயகர்களின் அசைவுகள் அனைத்துமே ஹீரோயிசமாகி வரும் நிலையில், ஜீ.வி.யின் இருப்பு மிக அவசியமாகிறது. எவரும் செய்யத் துணியாததைச் செய்வதை விட, அதை சரியாகவும் சுவாரசியாகவும் செய்வதிலேயே சூட்சமம் அடங்கியுள்ளது. பார்வையாளர்களைத் தெறிக்கவிடாத அத்தகைய இயக்குநர்கள் அவருக்குக் கிட்டுவாராக.!