
‘ஏழு கலர்’ மீஞ்சூர் வஞ்சரம் என்ற தாதாவிடமிருந்து, அதிர்ஷ்டத்தைத் தரும் கட்டப்பா எனும் வாஸ்து மீன் தொலைந்து விடுகிறது. பிறந்தது முதலே அதிர்ஷ்டம் கெட்டவராகக் கருதப்படும் ‘பேட் லக் (bad luck) சிபி சத்யராஜின் வீட்டுக்கு அம்மீன் வந்து சேர்கிறது. பின் சிபி சத்யராஜின் வாழ்வில் என்ன மாதிரியான மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதே படத்தின் கதை.
மீஞ்சூர் வஞ்சரமாக மைம் கோபி நடித்துள்ளார். திரைக்கதை தான் படத்திற்கு வில்லன் எனினும் இவரை வில்லன் எனக் கருதிக் கொள்ளலாம். தனது அனைத்து அதிர்ஷ்டத்துக்கும் கட்டப்பா தான் காரணமென நம்பும் பாத்திரம் இவருக்கு. மீன் காணாமல் போனவுடன், அவர் அடையும் பதற்றத்தைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். படத்தில் முழுமையாக வார்க்கப்பட்டுள்ள மிகச் சொற்ப கதாபாத்திரங்களில் இவருடையதும் ஒன்று.
இரண்டே இரண்டு காட்சியில் வந்தாலும், ‘பெயின்டர்’ நண்டாக வரும் யோகிபாபு வழக்கம் போல் டைமிங்கில் கலக்கியுள்ளார். அவரைப் பார்த்தவுடனேயே திரையரங்கில் மக்கள் சிரிக்கத் தொடங்கிவிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆறு விரல் டிடெக்டிவ் சங்கராவாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‘டாடி’ சரவணன். துப்பறிவதில் அவருக்குள்ள ஆர்வத்தை இன்னமும் கூட காமிக்கலாகச் சொல்லிச் சுவாரசியப்படுத்தி இருக்கலாம் இயக்குநர் மணி சேயோன்.
விஜய் சேதுபதியின் பக்காவான மாடுலேஷனில், ‘பேட் லக்’ பாண்டியனின் பிறப்பும் புகழும் டைட்டிலின் பொழுது அனிமேஷனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள முழுமையும் புத்திசாலித்தனமும் படத்திலும் தொடராதது பெரும்குறை. சிபி, ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் எபிஸோடும் அதன் வேகம் காரணமாக மனதில் நிற்கவில்லை. ரொம்ப மாடர்னான கதாபாத்திரமாக ஐஸ்வர்யா அறிமுகமானாலும், பாடற்காட்சிகளுக்கு உதவியுள்ளாரே தவிர கதைக்குப் பெரிதும் உதவவில்லை. ஷீலா எனும் பாத்திரத்தில் இரண்டு காட்சியில் வந்தாலும், சாந்தினி தமிழரசன் கதையின் ஓட்டத்துக்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாயகன் நாயகிக்குள்ளான காதலை எப்படி முழுமையாகக் காட்டவில்லையோ, அப்படியே அவர்களுக்கு இடையிலே தொடங்கும் ஊடலையும் காட்சிப்படுத்தத் தவறியுள்ளார் இயக்குநர். பாடல் காட்சிகளிலுள்ள நெருக்கம் தான் ‘கெமிஸ்ட்ரி’ என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத கதை எனினும், திரைக்கதையின் கோர்வையின்மை படத்தில் ஒன்றவிடாமல் அலைக்கழிக்கிறது.
முகத்தைச் சுளிக்குமளவு இல்லையெனினும், படம் நெடுகேயே இரட்டை அர்த்த வசனங்களுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, இரண்டாம் பாதி படம் முழுக்கவே அப்படித்தான். ‘கீச்சான்’ எனும் பாத்திரத்தில் வரும் காளி வெங்கட்டை இதற்காகவே நேர்ந்து விடப்பட்டுள்ளனர். அவரது பாஸ் சுறாவாக வரும் திருமுருகனும் வீணடிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வரும் எபிசோட் காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் ‘டபுள் மீனிங்’கில் பேசுவதுதான் ஒரே லட்சியம் என்பதாக உள்ளது.
மையக் கதைக்கு உதவிடாத தனி ட்ராக்கில், ‘விஜய் டிவி’ சேதுவும் அவரது மகளாக பேபி மோனிகாவும் வருகின்றனர். இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனாலும், படம் எங்கேயும் சலிப்படைய வைக்கவில்லை என்பது சற்று ஆறுதலான சங்கதி. பாடற்காட்சிகளிலும், ‘ஏழு கலர்’ வஞ்சரம் மற்றும் காளி வெங்கட்டின் உடைகளிலும், காஸ்ட்யூம் டிசைனர் கீர்த்தி வாசனின் அழகான ரசனையைக் காண முடிகிறது. ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவில், படத்தின் ஃப்ரேம்கள் அழகாகப் பளீச்சிடுகின்றன. கலை இயக்குநர் M.லஷ்மி தேவின் உழைப்பும், படும் நெடுகே அழகாய் மிளிர்கிறது.
பாகுபலி ஒரிஜினல் கட்டப்பாவான சத்யராஜிற்கும், இப்படத்தில் வரும் கட்டப்பா மீனிற்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமையுண்டு. இருவருமே தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள். ஆனால், பாகுபலி கட்டப்பாவிற்கோ அவரது பரம்பரையினருக்கோ கிடைக்க வாய்ப்பேயில்லாத பெரும்பேறு ஒன்று இம்மீனிற்குக் கிடைக்கிறது. அது என்னவென்று அறிய படம் பாருங்கள்.