எட்டுப் பேர் நேர்முகத் தேர்விற்காக ஓர் அறையில் கூடுகின்றனர். ஒரு மணி நேரம் நடக்கும் அத்தேர்வின் முடிவில், ஒருவர் தான் உயிருடன் வெளியேற முடியும். அந்த ஒருவர் யார் என்பதே தாயம் படத்தின் கதை.
பகடை உருட்டும் பொழுது, தாயம் விழ ஓர் அதிர்ஷ்டம் தேவை. எட்டுப் பேரில் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதே படத்தின் தலைப்புக்குப் பொருள். சஸ்பென்ஸ் த்ரில்லரில் யார், ஏன் என்ற கேள்வியைக் கடைசி வரை தக்க வைப்பது ஒரு கலை. ஆனால், ட்விட்டர் காலத்தில் அது காலாவதியாகி விட்ட பாணி. சஸ்பென்ஸை இன்றளவும் சுவாரசியப்படுத்துவது ‘எப்படி’ என்ற கேள்விக்கான விடை தான். யார், ஏன் என்ற கேள்விகளுக்கான விடையை, முதல் ஷோ பார்ப்பவர்களிடமிருந்து சகலருக்கும் தொழில்நுட்பம் கடத்தி விடுகிறது. எப்படி திரைக்கதை அமைத்துள்ளனர் என்பதுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். வெற்றி, என்பது இங்கே ரசிகர்கள் மனதில் படம் ஏற்படுத்தும் அழகிய மங்கா நினைவுகள் எனக் கொள்ளலாம். படம் முன்னதையே சுவாரசியம் என்ற கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாபின் இரண்டாவது படமிது. கதை இவரைச் சுற்றி நகர்ந்து இவரிலேயே தாயமாய் ஒடுங்கி முடிகிறது. நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கதையில், ஒவ்வொருவரின் நடிப்புமே மிக நன்றாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ரசிகர்களின் முழுக் கவனமும் கதாபாத்திரங்களின் மேல் தான் இருக்கும். வசன உச்சரிப்புக்கும், வாயசைவுக்கும் பொருத்தமில்லாவிடில் பார்வையாளர்களின் கவனம் சுலபமாய்த் திசை மாறிவிடும். இயக்குநர் கண்ணன் ரங்கஸ்வாமி கூடுதல் கவனத்துடன் இருந்திருக்கலாம்.
படத்தின் உண்மையான நாயகன் என்று பார்த்தால் ஒளிப்பதிவாளர் பாக்கியராஜ் தான். அறையை விட்டு வெளியேறிடாத கதையை, மிக அழகாக தன் ஒளிப்பதிவால் சுவாரசியப்படுத்தியுள்ளார். அறைக்குள்ளேயே கேமிராவைத் தோளில் வைத்து, சாத்தியமான அனைத்துக் கோணங்களையும் உபயோகித்துள்ளது சிறப்பு. கலை இயக்குநரான வினோத் ராஜ்குமாரைத் துணை நாயகன் எனச் சொல்லலாம். அறிமுக நடிகர்கள் சொதப்ப, முழுப் பொறுப்பையும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கச்சிதமாய்ப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். சதீஷ் செல்வத்தின் பின்னணி இசையும் உதவியுள்ளது.
படத்தின் தொழில்நுட்ப உழைப்பிற்கு ஈடு செய்யும் வகையில், இன்னும் எளிமையான சுவாரசியமான திரைக்கதை அமைந்திருந்தால் படம் பார்வையாளர்கள் மனதில் பதிந்திருக்கும்.