தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.
சமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையைப் படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு!
அந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்யத் தயாராகி விட்டார். ஆம், இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.