காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம்.
அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும், அப்பழக்கத்தைக் விட்டுவிடும்படி நாயகி சதா அறிவுறுத்தியபடியே உள்ள போதிலும் கடைசி வரை புகைத்துக் கொண்டே உள்ளார் நாயகன். தவிர்த்திருக்கலாம்.
‘சிறியவையே அழகு!’ எனச் சொல்லும் கதாபாத்திரத்தில் வெண்பா நடித்துள்ளார். அவரது நடிப்பும் அவரைப் போலவே அழகாய் உள்ளது. காதலில் விழும் பதின் பெண் பாத்திரத்திற்கு நம்பகத்தன்மையைக் கொடுத்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கிறது. இயக்குநரை இதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்கும் தன் மகளைப் பார்த்துக் கலங்கும் காட்சியில் அசத்தியுள்ளார் கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி. மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் மறைந்த நடிகை கல்பனா படபடக்க வைக்கிறார்.
நாயகனின் நண்பர்கள் விவேகாகவும் ஜெயாவாகவும் முறையே நடித்திருக்கும் லிங்காவும் ஜெயகணேஷும் மட்டுமன்று, நாயகனே கூட பள்ளி மாணவியின் காதலை ஏற்க மறுக்கிறார். அதுவும் அந்தச் சின்ன பெண் ஸ்டூல் மேல் நின்றால் தான் நாயகனின் உயரத்திற்குச் சமன் செய்ய இயலும். ஆனால் அப்பெண்ணிற்கோ தன் காதலை வெளிப்படுத்துவதிலும், அதைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருப்பதிலும் எவ்வித மனத்தடங்கலும் இல்லை. காதல் விஷயம் தந்தையின் காதிற்கு எட்டி, அவர் கடிந்து கொண்டாலும் கூட, தன் காதலில் மிக உறுதியாக உள்ளார்.
ஆட்டோ ட்ரைவர் வேலனாக நடித்திருக்கும் ஷரத்திற்கும், நாயகிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரசியமாக உள்ளது. ஆங்காங்கே சில காட்சிகள் இழுவையாக இருந்தாலும், காதல் கதையைச் சொல்லும் இயக்குநரின் ரசனை அதை மறக்கடிக்கிறது. திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது தரண் குமாரின் இசை.
கசப்பு கலந்த காதலாக இனிக்கிறது படம்.
– பிரகாஷ் ராமன்