
மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். சிங்கப்பூர் அரசின் மீடியா டெவலப்மென்ட் வாரியமும் (MDA), தமிழ்த் திரையுலகமும் கை கோர்த்துள்ள முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராகும் கனவில் ஹரீஷ் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கிறான். அங்கு அவனுக்கு என்ன நடந்தது என்றும், நினைத்தது போல் திரைப்படம் இயக்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் கோகுல் ஆனந்த பல ஃப்ரேம்களில் துல்கரை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார். ஏமாற்றப்படும் கோபத்தில் அவர் செய்யும் ஒரு காரியம், அவரது ஃப்யூச்சரைத் தலைதெறிக்க ஓடச் செய்கிறது. ஆம், ஃப்யூச்சரே (எதிர்காலம்) தான். ஃப்யூச்சர்கள் எனப் பன்மையில் கூடச் சொல்லலாம். அவரது கனவு அவரை விட்டு தூரம் செல்கிறது எனப் படத்தின் தொடக்கமே காமிக்கலாகக் காட்டப்படுகிறது. “யார்றா இவன்? எங்கிருந்துடா வர்றான்?” என ஒன்றும் புரியாத வேளையில், ஒரு பாத்திரம் என்ட்டராகி, நாயகனைத் தண்ணிக்குள் முக்கிச் சிங்கப்பூர் அனுப்பி வைக்கிறது.
ஓரளவு ஜாலியாகத் தொடங்கும் படம், சிங்கப்பூரில் ஹரீஷ் வானம்பாடியைச் சந்தித்ததும் முழு நீள காமெடிப் படமாக மாறுகிறது. தியேட்டர் ஆர்டிஸ்ட்டான ராஜேஷ் பாலச்சந்திரன் வானம்பாடி கதாபாத்திரத்தில் அதகளப்படுத்தியுள்ளார். அவருக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். ‘தியேட்டர் ஆர்டிஸ்ட்களை நம்பாதே!’ என டி-ஷர்ட் போட்டுக் கொண்டிருப்பவரது பேச்சும், முக பாவனையும் ரசிக்க வைக்கின்றன.
செக்மேட் எனும் வில்லன் படத்தில் வருகிறார். ஆனால், அவர் தன் பெயர் செக்மேட் இல்லையென்றும், ‘என் பெயர் பாப்பாபிளாஸ்ட்’ என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வார். அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை எனினும், காட்சிகளாக க்ளைமேக்ஸ் ஃபைட்டில் அவரும், அவரது ஆட்களும், நல்லதொரு ‘பிளாக் காமெடி’க்கு உத்திரவாதம் அளிக்கின்றனர். குறிப்பாக, ஹெட் ஃபோன் போட்டுக் கொண்டு சமைக்கும் கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.
ஜிப்ரனின் இசையில் பாடல்களும், பின்னணி ஒலிப்பதிவும் துள்ளல் ரகம். குறிப்பாக, ‘ரோ.. ரோ.. ரோஷினி’ பாடலும், கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் மிளிரும் சிங்கப்பூரும் அட்டகாசம். மீசையில்லாமல் அசத்தலாய் கோகுல் ஆனந்த் வரும் ‘வாடி வாடி’ கனவுப் பாட்டும் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் ஒரு சீரியஸ்னஸ் இல்லை. காமெடி படத்தில் என்ன சீரியஸ்னஸ் வேண்டிக் கிடக்கிறது என்றாலும், ரோஷினி எனும் ஹீரோயின் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கலாம். அவரது கதாபாத்திரம் மனதில் பதியவே இல்லை. நாயகனுக்குக் காதல் எழுவதற்கான காரணிகள் மிக லேசானதாய், ஓர் அழுத்தில்லாமல் இருக்கிறது. ‘போகாதே!’ பாடலில் தொனிக்கும் ஃப்லீங்க்ஸ்க்கு வொர்த்தான காதல் கதை இல்லை அவர்களுடையது.
சென்னை2சிங்கப்பூர், ஜாலியான மனநிலையில் பார்க்க வேண்டிய லைட் ஃபீல் மூவி.