கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை.
மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர்.
குமரன் எனும் காவல்துறை அதிகாரியாக, மாநகரம் படத்தில் கலக்கியிருந்த சந்தீப் கிஷன் நடித்துள்ளார். அந்தப் படத்தில் இருந்த ஃப்ரெஷ்னஸும் வசீகரமும் இதில் மிஸ்ஸிங் என்றாலும், இந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்குமளவு நன்றாக நடித்துள்ளார் சந்தீப். அவரது சிறு வயது நினைவுகள், கொலைகள் நடக்கும் பொழுது எழுந்து அவரைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவதை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். அந்தச் சின்ன, அவசரமான ஃப்ளாஷ்-பேக்கிற்குள் உள்ள நச்சென்ற கதையும், சைக்கலாஜிக்கல் ஃபேக்டரும் மெயின் கதையில் இல்லாதது ஒரு குறை.
பிரம்மன் படத்தில் வீணடிக்கப்பட்ட லாவண்யா திரிபாதிக்கு, தமிழில் இது இரண்டாவது படம். இம்முறை அவருக்கு அதிர்ஷ்டம் துணை புரிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சைக்காட்ரிஸ் ஆதிரையாக அவருக்குச் சீரியசான ஒரு ரோலைக் கொடுத்துள்ளார் இயக்குநர். சொல்லப் போனால், இவருக்கு மட்டுந்தான் ஓரளவு முழுமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. கருணாவாக நடித்திருக்கும் பகவதி பெருமாளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2015இல், சாப்பி (Chappie) என்றொரு படம் வந்தது. அந்தப் படத்தின் க்ளைமேக்ஸை நினைவுப்படுத்துகின்றது இப்படத்தின் மையக்கரு. அதை அழகாகக் கையாணிருந்தாலும், அவ்வளவு பெரிய ஹை-டெக் லேப்பைத் (Lab) தனி மனிதராக எப்படி விஞ்ஞானியில் நிர்மானிக்க முடிந்தது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. அதற்குத் தேவையான மின்சாரமும், ஆளே இல்லாத அந்த வீட்டில் இருந்து எப்படி லேப்க்குத் தொடர்ந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறி. லேப்-பை அழகாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர் கோபி ஆனந்த்.
சி.வி.குமாரின் கதை தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளது. ஆனால், நலன் குமாரசாமியின் திரைக்கதை அதை மேலும் சுவாரசியப்படுத்த தவறியுள்ளது.
படம் தந்திருக்க வேண்டிய தாக்கத்தைக் குறைப்பது, கதாபாத்திர டீட்டெயிலிங்கில் உள்ள குறைப்பாடே! விஞ்ஞானியின் சிகரெட் பிராண்டையும், சுத்தத்தின் மீதான ஈடுபாட்டையும் வரித்துக் கொள்ளும் தீனாவோ, மைம் கோபியோ, ஜாக்கி ஷெராஃபோ, விஞ்ஞானியாக நடித்திருக்கும் அமரேந்திரனின் உடல்மொழியையோ, மனப்பாங்கையோ (attitude) வெளிப்படுத்தாது இயக்குநரின் அனுபவமின்மையைப் பறைசாற்றுகிறது. சுத்தமாக இருப்பதில் மிக அதிக கவனம் செலுத்தும் ஒருவனால், கையில் படியும் இரத்தக் கறையைச் சைக்கோ போல் சுவரில் தடவிக் கொண்டிருக்க முடியாது. முழுமையைத் தராத க்ளைமேக்ஸிலும் சறுக்கியுள்ளது படம். சுவாரசியமான கதை மட்டுமே போதும் என இயக்குநர் சி.வி.குமார் முடிவெடுத்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. சின்னச் சின்ன விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் மறக்கவியலாத த்ரில்லராய் மனதில் பதிந்திருக்கக் கூடும்.