‘குக்கூ‘ படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விநியோக துறையில் நிலையான வெற்றியைத் தழுவி வரும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பரப் பட இயக்குநர்) இயக்குகின்றார். ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும் இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
“நடிப்பிற்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றிய ஒரு பெயர் – மாளவிகா நாயர். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதையைக் கேட்ட அடுத்த கணமே, மாளவிகா இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். ‘குக்கூ’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் இந்தப் படத்தில் நடிக்கின்றார்.
எங்கள் படத்தின் படப்பிடிப்பைக் கடந்த 27.03.2017 அன்று நாங்கள் புதுச்சேரியில் துவங்கி இருக்கின்றோம். தற்போது தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தப் படப்பிடிப்பில் எங்களோடு இணைந்து பணியாற்றும் மாளவிகா நாயர், வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மீண்டும் எங்கள் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார்” என்று உற்சாகமாகக் கூறுகிறார் இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன்.