Shadow

மஹாவீர்யர் விமர்சனம்

ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன்.

அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி.

பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்துகின்றனர். நீதிமன்றத்தில் சிரிக்கும் காவலரைத் தண்டிக்கும் விதமாக, ஒரு மூட்டை (24000₹) சில்லறையை எண்ண விட்டு விடுகிறார் சித்திக். இப்படியாக உப கதைகளையும் ரசிக்கும்படி எடுத்துள்ளனர்.

முதற்பாதியில் ஒரு ஃப்ளேவர், இரண்டாம் பாதியில் வேற ஃப்ளேவர். அபூர்ணாநந்தாவாக நடித்திருக்கும் நிவின் பாலி, குறுக்கு விசாரணை செய்யும் காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது. இரண்டாம் பாதியில், கோர்ட் ரூமின் ஓர் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவராக மட்டுமே வருகிறார் நிவின் பாலி. க்ளைமேக்ஸில் ஒரு சாமியாராகக் கோர்ட் ரூமில் ஒரு மேஜிக் செய்கிறார்.

தளபதி வீரபத்திரனாக நடித்திருக்கும் ஆசிப் அலி தான் இரண்டாம் பாதியின் நாயகன். ஒவ்வொருவரின் பார்வையிலும் கதை வரும்போது, குன்றுகளின் பின்னணியில் குதிரையில் வருகிறார். இறுக்கமான முகத்தில் கனமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கிறார் (பாலசரவணனின் சகோதரரோ என்ற எண்ணத்தைத் தோற்று வைக்கிறது அவரது சாடை). மிரட்டலான விக்கல் ஒலியை எழுப்பிய வண்ணம் வரும் மகாராஜாவாக லால் நடித்துள்ளார். அவர் பெரும்பாலான காட்சிகளை, அவர் மட்டுமே திரையில் தோன்றும்படி பெரிதாகக் காட்டுகின்றனர். அது, அவரது கதாபாத்திர பெயரான ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜாவிற்குப் பொருந்திப் போகிறது.

தேவயானியாக ஷான்வி ஸ்ரீவட்ஸா நடித்துள்ளார். ஒரு பொம்மை போல் திரையில் தோன்றுபவர், இராண்டாம் பாதியின் முடிவில் தன் நடிப்பால் ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறார். இஷான் சாப்ராவின் இசையில், ராஜஸ்தானிய வகைமை பாடல் துள்ளலாக அமைந்துள்ளது. பீரியட் & ஃபேண்டசி படம் என்பதால் கலை இயக்குநர் அனீஸ் நாடோடியின் பங்கு கூடுதலாகவே இருக்கும். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

ஒரே மாதிரியான சினிமா பார்த்து சலிப்படைந்தவர்களுக்கு, முழுமையைத் தராவிட்டாலும், ஒரு நல்ல படம் பார்த்த நிறைவை நிச்சயம் தரும்.