Shadow

நதி விமர்சனம்

மதுரை, சாதி, பதின் பருவத்துப் பையன்களின் கையில் சிறுவயதிலேயே கத்தி, கொலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் சுள்ளான்கள், கனவுகளோடு இருக்கும் இளைஞர்கள் என சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் கதை தொடங்குகிறது.

ஷட்டில்காக் வீரனான சாம் ஜோன்ஸ்க்கும், கயல் ஆனந்திக்கும் காதல் மலருகிறது. அவர்களுக்கு இடையில், ஜாதியும் கெளரவமும் தன் கோர முகத்தைக் காட்ட, காதலர்களின் கதி என்னவென்பதே படத்தின் கதை.

கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் மதுரையின் குற்றப்பின்னணி பற்றிச் சொல்வது; பின், இதுதான்ங்க காலேஜ், காலேஜ் வகுப்பறை எனக் காட்டி, அங்கு ஒரு பாடல் – நடனம் அமைத்து, கதைக்குள் செல்ல சுற்று வழியை எடுக்கும் பழமையான கதைசொல்லல் பாணி உபயோகிக்கப்பட்டுள்ளது. கதைக்களம் மதுரை என்பதால், அதன் தொன்மையை உணர்த்தும் குறியீடாக அந்தப் பாணியைப் பயன்படுத்தியிருப்பார் போல இயக்குநர் தாமரை செல்வன்.

சாம் ஜோன்ஸே படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். கோபம், காதல் என எதையும் வெளிக்காட்டாத முகம். உலகமே இடிந்து விழுந்தாலும், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், வாழ்க்கையை ஒரே சீரானத்தன்மையுடன் அணுகும் சாம் ஜோன்ஸைக் காதலிப்பவராகக் கயல் ஆனந்தி நடித்துள்ளார். கயல் ஆனந்தியின் வீட்டில், எப்பொழுதும் முறுக்கிக் கொண்டே தெரியும் ஒரு முரட்டு அண்ணன், ‘கெளரவம்டா, அதானே எல்லாம்!’ என முறைத்துக் கொண்டே இருக்கும் பெரியப்பா வேல ராமமூர்த்தி, ‘அவன்லாம் ஒரு ஆளா? குத்திப் போட்டுடணும்ணே’ என சதா சிடுசிடுக்கும் அப்பா ஏ. வெங்கடேஷ், இவர்களுக்குக் கொம்பு சீவி விடும் ஒரு பெரியம்மா ஆகியோர் உள்ளனர்.

கயல் ஆனந்தியின் வீட்டிலுள்ளோருக்கு, மதுரையை எப்படி தன் கன்ட்ரோலிலேயே வைத்திருப்பது மட்டுமே சிந்தனை. அவர்கள் மத்தியில் வாழும் கயல் ஆனந்திக்குத் தானுண்டு தன் வேலையுண்டு என பிளாஸ்டிக் முகத்துடனிருக்கும் சாம் ஜோன்ஸ் மீது காதல் எழுவது இயல்புதானே! ஆனால், குடும்பம், ஷட்டில்காக் நேஷ்னல்ஸ் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் சாம் ஜோன்ஸ்க்கும் சட்டென மலர்ந்து விடுகிறது.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கிறார் முனிஷ்காந்த். ரஜினி பக்தராக, ஆட்டோ ஓட்டுநராக, ஜாலியான தந்தையாகப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். குணசித்திர நடிகராகத் திரையில் அவரது பங்கு ரசிக்க வைக்கிறது. கயல் ஆனந்தியின் தாய்மாமனாக கரு. பழனியப்பன் நடித்துள்ளார். சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஒரு நயவஞ்சகமான கதாபாத்திரம் அவருக்கு. அதை நடிப்பால் அல்லாமல் பேசியே வெளிப்படுத்தியுள்ளார்.

கயல் ஆனந்தி, படத்தின் க்ளைமேக்ஸ் கேட்டு நடிக்கச் சம்மதிருப்பார் போலும். நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனையை அவர் தீர்க்க எடுக்கும் முடிவு, நியாயமாக ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் படத்தின் ஓட்டத்தில், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அது நீர்த்துப் போகிறது.