ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.
தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான்.
கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக்கமாகச் சுற்றும் சூரி நகைச்சுவைக்குப் பெரிதாக உதவவில்லை. குணசித்திர பாத்திரத்துக்குரிய கூறுகளோடு ஒதுங்கிக் கொண்டு, இயக்குநர் ஹரி படத்தில் வருவது போல் சூரி படுத்தவில்லை
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் மதுரை பளபளக்கிறது. நிவாஸ் K.பிரசன்னாவின் ஒலிப்பதிவில் எல்லா வாத்தியங்களும் கொண்டாட்டமாய் ஒலிக்கிறது. அக்கொண்டாட்டத்திற்கு, பாடலாசிரியர் மோகன்ராஜனின் வரிகள் வலு சேர்க்கின்றன.
முத்தையாவின் அனைத்துப் படங்களிலும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைத்திருப்பார். இதில் அப்படி யாரும் இல்லையென்றாலும், கிண்டல் செய்யப்படும் தோழிக்காக முன்னாவைச் செருப்பால் அடிக்கும் கனிகாவிடம் அது லேசாய் எட்டிப் பார்க்கிறது. கெளதம் கார்த்திக்கின் அக்கா மகளாக வரும் ஹர்ஷாவும், வெகு சில ஃப்ரேம்களில் வந்தாலும் கவனத்தை ஈர்க்கிறார்.
இந்த உலகத்தில் சிறந்தது “வன்முறை” தான் என்றும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் வன்முறை மட்டுமே தீர்வு என்றும், அந்த வன்முறையை நேர்த்தியாய்ச் செய்ய காவற்கார வம்சத்தினாரால் மட்டுமே முடியுமென்றும், அந்த வம்சத்தினரைப் படிக்க வைத்தாலும் அரிவாளையும், வேல் கம்புக்களையும் விட்டு விலகமாட்டார்கள் என்றும் தத்துவ முத்துகளைப் படத்தின் மையச்சரடுகளாய் அமைத்துள்ளார். முத்தையாவிற்கு என்ன கோபமோ தெரியவில்லை. நான்கு படங்களில் தூக்கிப் பேசிவிட்டு, ஐந்தாம் படத்தில் காவற்கார வம்சத்தினராய் வகையாய் அவமானப்படுத்தியுள்ளார்.
“செமண்ணே. ஆனா பார்த்துச் செஞ்சு விடுங்கண்ணே. முத்துராமலிங்கம் படமே சொதப்பிக்கிச்சு.”
“சார்!! ஹீரோ சார், சத்தியமா நாம ஜாதிப்படம் பண்ணலை சார். உங்களுக்கு ஆறு அக்கா-ங்க சார். அதாவது சென்ட்டிமென்ட் படம் சார். நீங்க முதலில் அதை உறுதியா நம்பணும் சார். காவற்கார வம்சத்தைச் சேர்ந்த உங்களை, உங்க வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் ஏமாத்திப் படிக்க வச்சி முன்னேத்தி விட்டுடணும்னு ஆசைப்படுறாங்க சார். ஆறு அக்காங்க சேர்ந்து உங்களுக்கு அந்தத் துரோகத்த பண்றாங்க சார். நீங்க யார் சார்? ஹீரோ, சார். வீட்டுப் பெண்கள் உங்களுக்கு இழைக்கும் துரோகத்தில் இருந்து மீண்டு, நீங்க எப்படி வில்லனை வெட்டி வம்சத்தின் புகழை நிலைநாட்டுறீங்கங்கிறது தான் கதை சார். இந்தப் படத்துல இருந்து, நீங்க மாஸ் ஆக்ஷன் ஹீரோ சார்!”
கெளதம் கார்த்திக், இந்தப் படத்தில் வக்கீலாக வருகிறார். அவர் மீது கண்டதும் காதலில் விழும் நாயகி, நிஜமாவே வெற்றி ஒரு வக்கீலென நினைத்துக் கொண்டு ஒரு வழக்கைக் கொண்டு போய்த் தருகிறார் மஞ்சிமா மோகன். ‘முத்தையா படத்தில் இப்படியொரு அப்பாவியான நாயகியா? அடப்பாவத்த. முதல்ல வம்சத்தின் புகழைக் காலி பண்ணாரு; பின், வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர் என்ற தன் இமேஜையும் சேர்த்து காலி பண்ணிக்கிட்டாரே! என்னத்தான் ஆச்சு முத்தையாவுக்கு?’ என ஒரே பரிதாபமாய்ப் போய்விட்டது.
‘அது அப்படியில்லைங்க சகோ. நீங்க இதைச் சரியா விளங்கிக்கிடணும். 400 ரூபா ஜீன்ஸ் போட்டவன்லாம் காந்தாரி மகனுங்கன்னு வச்சுச் செஞ்சு விட்டார்ல்ல? எவ்ளோ சாமர்த்தியமா அவிங்கள சொரட்டைக்கு இழுத்தாப்படி பார்த்தியா? புரிஞ்சவன் பிஸ்தா’ என்றார் ஓர் அதி தீவிர முத்தையா ரசிகர் உற்சாகமாய்க் கண்ணடித்தபடி. ஓஹோஹோ, இதுதான் ஈயம் பூசின மாதிரியும் தெரியணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற டெக்னிக் போல!! அப்போ விரைவில், யார் கண்ணகி, யார் காந்தாரி என டி.என்.ஏ. சான்றிதழ் வழங்க ஒரு சோதனை மையத்தை முத்தையா உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பத்தொன்பது வருஷத்துக்கு முன், ‘போய் புள்ளக்குட்டிங்களைப் படிக்க வைங்க’ எனச் சொன்னார் சக்திவேல். அவர் பேச்சை நம்பி, ஆறு அக்காக்களும் சேர்ந்து தம்பியைப் படிக்க வைத்தால், ‘தம்பி வெற்றியோ மாயன் பேச்சைக் கேட்டு உருப்படாமல் போயிடுச்சே!’ என பேச்சி அக்காவின் அழுகை கேட்டுக் கொண்டே இருந்தது. கண்ணகியாய் வாழ்ந்த பேச்சி அக்காவின் அந்த அழுகைக்கு முத்தையாக்கள் என்ன பதில் சொல்வார்களோ?