Shadow

K-13 விமர்சனம்

K13-movie-review

K13 என்பது சோவியத் யூனியனின் பிரபலமான ஏவுகணைகளில் ஒன்று. அமெரிக்காவின் சைட்வைண்டர் எனும் ஏவுகணையை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து K13 ஏவுகணையைத் தயாரித்து அசத்தியது சோவியத் யூனியன். அப்படி, இப்படத்தின் க்ளைமேக்ஸில் பிரதான கதாபாத்திரமான திலீப், ஒரு சம்பவத்தைத் தனக்குச் சாதகமாய் ‘ரிவர்ஸ்’ செய்து பயன்படுத்திக் கொள்கிறான். ஆக, K13 எனும் தலைப்பை ரிவர்ஸ் செய்யும் சாதுரியத்திற்கான குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம்.

பாரில் சந்தித்துக் கொள்ளும் மதியழகனும் மலர்விழியும், ஒன்றாக மலர்விழியின் வீட்டிற்குச் செல்கின்றனர். விழிப்பு வந்து மதியழகன் கண்ணைத் திறந்தால், அவன் நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறான். அந்த நாற்காலியின் பின்னாலுள்ள சோஃபாவில் வலதுக்கை நரம்பு அறுக்கப்பட்டு இறந்து கிடக்கிறாள் மலர்விழி. அது கொலையா, தற்கொலையா, எதற்காக ஏன் எப்படி மலர்விழி இறந்தாள் என்ற சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி தான் படத்தின் கதை.

மலர்விழி இறந்து கிடக்கும் வீட்டின் எண் K13. தலைப்பின் நேரடிப் பொருளாக இதைப் பாவிக்கலாம்.

அந்த வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த மதியழகனாக அருள்நிதி நடித்துள்ளார். மெளனகுரு, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் என அருள்நிதியின் த்ரில்லர் படங்களின் தேர்வு அவருக்குத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் இப்படமும் சேர்ந்து கொள்ளும். அவரைச் சுற்றியே படம் நகர்கிறது. ஏன் கட்டிப் போடப்பட்டுள்ளோம், ஏன் மலர்விழி இறந்தாள் என எதுவும் புரியாமல், அவ்வீட்டில் இருந்து எப்படியாவது தப்பிக்க நினைக்கும் அவஸ்தையைத் தன் நடிப்பில் அழகாகப் பிரதிபலித்துள்ளார் அருள்நிதி.

வீட்டில் பிணமாகவும், பாரில் போதையுடன் இருக்கும் அருள்நிதியிடம் அதி வசீகரமாகப் பேசும் மலர்விழியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ஆதிக் ரவிசந்திரனிடன் கெஞ்சும் பொழுது, காயத்ரியிடம் மன்னிப்புக் கேட்கும் பொழுது, அருள்நிதிக்கு உதவி செய்ய நினைக்கும்பொழுது என ஸ்ரத்தா ஸ்ரீநாத் மிக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் சில காட்சிகளில், கதை நகராதது போல் லேசாகச் சலிப்பு எட்டிப் பார்க்கிறது. முதற்பாதி விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ் ஆவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். படத்திற்குள் வரும் படத்துக்கு ஒரு க்ளைமேக்ஸ். அந்த ஆச்சரியம் விலகும் முன்பே, ஒரு கதைக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய க்ரேஸி எழுத்தாளர்கல் பற்றிய வசனத்திற்கு நியாயம் கற்பிக்கும் மற்றொரு க்ளைமேக்ஸோடு படத்தை முடிக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். அவரது முதற்படத்திலேயே, இரட்டைக் க்ளைமேக்ஸ்களோடு அருமையானதொரு சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதிகம் நீட்டி முழக்காமல் இரண்டு மணி நேரத்திற்குள் (104 நிமிடங்கள்) படத்தை முடித்துவிட்டாலும், படம் ஒரு நிறைவைத் தராமல் அலைக்கழிக்கிறது.