Shadow

தேவி விமர்சனம்

Devi Tamil Vimarsanam

89இல், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘தேவி’ படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.

விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த ‘எங்கள் அண்ணா’ திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் பிரபுதேவா. ‘தேவி’ படம் நாயகியை மையப்படுத்திய படமென பிரபுதேவாவும், படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்யும் சொன்னாலும் கூட, இது முழுக்க முழுக்க பிரபுதேவா படம்தான். மாடர்னான பெண்ணுக்கு ஆசைப்படுவது முதல், தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மாடு மேய்க்கும் பெண்ணைக் கல்யாணம் செய்வதென ரூபியிடமிருந்து மீளும் வரை சகலமும் படத்தில் பிரபுதேவா தான். நடனத்தில் மட்டுமன்று நடிப்பிலும் பிரபுதேவா கலக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜியிடமும், தந்தையிடமும், பேயிடமும் சிக்கி அவர் தரும் ரியாக்‌ஷன்களுக்குத் திரையரங்கம் கலகலக்கிறது. அதுவும், தனது பாட்டியைப் போட்டு வெளுப்பதாக பிரபுதேவா கற்பனை செய்யும் காட்சியில் திரையரங்கிலுள்ள அனைவருமே சிரிக்கின்றனர்.

தேவியாகவும், ஆவி புகுந்த பின் ரூபியாகவும் தமன்னா கலக்கியுள்ளார். ஒரே காட்சியை, மூன்று மொழியில் பேசி மூன்று முறை நடித்ததோடு மட்டுமின்றி, செமயாக நடனமும் ஆடியுள்ளார். தன்னைக் கணவனுக்குப் பிடிக்கவில்லையோ எனக் கலங்கும் பொழுதும், தனக்கு என்ன நேர்கிறது; ஏன் எதுவும் ஞாபகமில்லை என வருந்தும் பொழுதும்; ரூபியாக தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொழுதும் தமன்னா தேறிய நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஸ்டார் நடிகர் ராஜ் கண்ணாவாக சோனு சூட் நடித்துள்ளார். தீவிரமான காதலால் படத்தின் முடிவில் அவர் கண் கலங்குகிறாரே அன்றி, பார்வையாளர்களுக்கு அந்நியமாகத் தோன்றுகிறார். ஆனால், கணவனாய் தனக்குள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு மனைவி மீது அக்கறையும் பரிதாபமும் கொண்டு பரிதவிக்கும் பிரபுதேவா மிக நெருக்கமாக இருப்பதோடு கலங்கவும் வைக்கிறார். அதுவும் ரூபி, கிருஷ்ணகுமாரின் குரலை ‘ம்யூட்’ செய்து டார்ச்சர் செய்யும் இடத்திலெல்லாம் பிரபுதேவா அற்புதமாக நடித்து தன் கையறு நிலையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபு தேவாவிற்கு அடுத்து, ஸ்டார் நடிகர் ராஜ் கண்ணாவின் மேனேஜராக நடித்திருக்கும் முரளி ஷர்மா கலக்கியுள்ளார். அவர் பேசும் தொனியும், எச்சூழ்நிலையையும் சமாளித்துச் சாதகமாக்கிக் கொள்ளும் பாங்கும் செம.

பிரபுதேவாவை வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதைத் தவிர்த்து, பேய் எந்த சேட்டையும் செய்வதில்லை. வழக்கமான பேய்ப் படமும் இல்லை. அச்சுறுத்தும் காட்சிகளோ, கோரமான காட்சிகளோ இல்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர்களைத் துரத்த பேய் செய்யும் ‘ட்ரிக்’ மிகச் சாதாரணம் தான் என்றாலும் புன்னகையை வரவைக்கும் ரகம். கணவனுக்கும், நடித்து புகழ் சம்பாதிக்க நினைக்கும் ஆவிக்குமான ஓர் ஒப்பந்தம் தான் படம். பால் ஆரோன் மற்றும் ஏ.எல்.விஜய்யின் திரைக்கதையின் வெற்றி அதன் எளிமையிலேயே அடங்கியுள்ளது. கண்ணை உறுத்தாத கலர் டோனில், மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.