Shadow

தா தா 87 விமர்சனம்

Dha-Dha-87 movie review

தாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது சரோஜாவும் நடித்துள்ளனர். சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சாருஹாசனை முன்னிறுத்தி இயக்குநர் விஜய் ஸ்ரீ, படத்திற்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துக் குழப்பியுள்ளார். அந்தக் குழப்பம் படத்தின் முதற்பாதி முழுவதிலுமே கூடத் தொடர்கிறது. மஞ்சள் துண்டு (பாமக), நீலத்துண்டு (விசிக) எனத் தெளிவில்லாத அரசியல், அவர்களை இயக்கும் ஆண்டவரின் அண்ணனான தாதா சத்யா, அதை விரும்பாத எம்.எல்.ஏ. என முதற்பாதி பயணிக்கிறது.

பிறகு, கவிதை போன்ற இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஜெனியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவி விஸ்வரூபமெடுக்கிறார். அவரது தந்தை ஜனா நாயுடுவாக ஜனகராஜ் நடித்துள்ளார். ஜனா மகள் ஜெனி என்பது குழப்பினாலும், மகள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் மிக்க உறுதுணையான அப்பாவாக நடித்துள்ளார் ஜனகராஜ். சாய் தீனாவை ஞாபகப்படுத்தும் சரீரமும் சாரீரமும் உடைய இயக்குநர் விஜய் ஸ்ரீ, காவலதிகாரி காட்டானாக நடித்துள்ளார். இடையிடையே அவரது ஒன்றிரண்டு வசனம் புன்னகையை வரவைக்கிறது.

படம் ஜெயில் பாண்டியைச் சுற்றியே நகர்கிறது. அந்தப் பாத்திரத்தில் இருந்து விலகாமல் திரைக்கதையை இன்னும் கச்சிதமாகக் கத்தரித்திருக்கலாம். அழுமூஞ்சி ஜெயில் பாண்டியாக ஆனந்த் பாண்டி பின்னிப் பெடலெடுத்துள்ளார். ஜெயில் பாண்டி பாத்திரம் அவருக்கு மிக இயல்பாகப் பொருந்தியுள்ளது. அவரது நண்பர் முட்டையாக வரும் ‘ஆதித்யா டிவி’ கதிர் படத்தின் கலகலப்பான ஓட்டத்திற்கு உதவுகிறார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாதிக்கு மட்டும் ஒரு கலைத்தன்மை வருவதற்கு நாயகி ஸ்ரீபல்லவிதான் முழுக்காரணம். விஜய் ஸ்ரீயின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். சத்யா (1988) படப்பாடல் பின்னணி மூலம், சாருஹாசனையும் சரோஜாவையும், கமலாகவும் அமலாவாகவும் உருவகித்துள்ளார் இயக்குநர். சாருஹாசன், சரோஜாவிடம் “ஐ லவ் யூ” சொல்லுமிடம் அழகாக உள்ளது. இயக்குநர் இவர்களுக்குள்ளான காதலையும் புரிதலையும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கலாம். ஆனால், நகரும் மேகங்களாய்ச் சட்டெனக் கடந்து விடுவது குறை. அந்தக் குறையை, ஆனந்த் பாண்டியும் ஸ்ரீபல்லவியும் போக்கிவிடுவதுதான் படத்தின் சிறப்பு. அதற்காக படத்தின் முதற்பாதியைப் பொறுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.

படத்தின் இன்னொரு விசேஷம், படம் திருநங்கைகளை அணுகியிருக்கும் கோணம். சிகை கோட்டைவிட்டதை கச்சிதமாகப் பார்வையாளர்கள் மனதில் தைக்கிறது தாதா 87. தாதா படமாகத் தொடங்கிக் கவிதையாக முடிக்காமல், கவிதையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாகக் காலகாலத்துக்கும் கோலேச்சியிருக்கும். இப்பொழுதும், அத்தகுதியை இப்படம் அடைந்திருந்தாலும் முழுமையாக இல்லை. அவர் தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் என்ற செய்தி, ஒரு சொல்லமுடியாத திருப்தியை மனதில் ஏற்படுத்துகிறது. இயக்குநர் விஜய் ஸ்ரீக்கு வாழ்த்துகள்.