Shadow

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், “தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் பாடல் கேட்டார்கள். ஹ்யூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ. வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைக்கிறார். அவர் பல வலிகளுடன் தான் இங்கு இருக்கிறார். அவருக்கு இந்தப்படம் வெற்றியைத் தரட்டும். இனி மேல் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்” என்றார்.

தயாரிப்பாளர் திருமலை, “சினிமாவிற்கு ஏற்ற ஒரு டைட்டில். ஒவ்வொரு படமும் திரைக்குக் கொண்டுவருவதில் மாபெரும் போராட்டம் இருக்கிறது. விஜய் சத்யா பார்க்க, ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கிறார். வெங்கடேஷ் சார் பல வெற்றிப்படங்களை உருவாக்கியவர். விஜய் சத்யாவிற்கு அருமையான படம் தந்துள்ளார். ஷெரீன் மிக அழகாக நடித்துள்ளார். இந்த 27 ஆம் தேதி எத்தனை படங்கள் வருகிறது என உங்களுக்குத் தெரியும், கார்த்தி சார் படத்துக்கு இணையாக இந்தப் போஸ்டர் இருக்கிறது. அம்ரீஷ் நல்ல பாடல்கள் தந்துள்ளார். அவர் நடித்தால் இன்னும் நன்றாக இருப்பார். ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இந்தப் படத்தைத் தயாரிப்பாளனாக இன்று வரை சுமந்து கொண்டிருக்கிறார் விஜய் சத்யா. இப்படி ஒரு ஹீரோ இருப்பது தமிழ் சினிமாவுக்குப் பெருமை. தமிழ் சினிமா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மகாராஜா எவ்வளவு பெரிய ஹிட் எனத் தெரியும். ஆனால், அந்தப் படத் தயாரிப்பாளரே தூக்கமில்லாமல் இருக்கிறார். அவருக்கு லாபமில்லை. ஷெரீன் இந்தப்படத்திற்கு வந்து கலந்துகொண்டிருக்க வேண்டும். வராமல் இருப்பது கேவலம். பணம் வாங்கித் தானே நடிக்கிறீர்கள். இந்தப்படத்தில் நடித்த இரண்டு நாயகிகள் வரவில்லை, நீங்கள் ஏன் நடிக்க வருகிறீர்கள்? இப்போது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இனிமேல் இது நடக்காமல் இருக்கத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

நடிகை வனிதா, “அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள். 10 வருடம் முன் எங்கப்பா உடன் சண்டையெல்லாம் நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்த போது, ஏ. வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏ. வெங்கடேஷ் சார் கேட்ட போது, ‘சார் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். என்றைக்கு என்று சொல்லுங்கள். நான் வருகிறேன்’ எனப் போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன். ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். எனக்குப் படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார்” என்றார்.

இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள். ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம். வரவில்லை. சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட, ‘உங்கள் பட ஹீரோக்களைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா. விஜய் சத்யா ஒரு நாள் கூப்பிட்டு, கதை சொன்னார் என் கருத்துக்களைச் சொன்னேன். ‘சார், நீங்க தான் டைரக்ட் பண்ணனும்’ என்றார். ‘என் ஸ்டைலில் இல்லையே!’ எனத் தயங்கினேன். ஆனால், ‘நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள்’ என்றார். மகிழ்ச்சியுடன், ‘ஒகே’ சொன்னேன். எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. வனிதா இந்தப் படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்குத் தெரியக்கூடாதென நினைத்தேன். இன்று வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். அம்ரீஷ் உடன் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என்றார்.

நடிகர் விஜய் சத்யா, “இயக்குநர் வெங்கடேஷ் சார் சூப்பராக இந்தப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – அம்ரீஷ்
பாடல் – நெல்லை ஜெயந்தன், கலைகுமார்
ஒளிப்பதிவு – மனோ V.நாராயணா
கலை – ஆண்டனி பீட்டர்
நடனம் – செந்தாமரை
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஷ்
சண்டை – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி, அருண்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியம்