Shadow

கடைசி உலகப்போர் விமர்சனம்

ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், ‘ரிபப்ளிக் (O.N.O.R.)’ எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது.

இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை.

கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு.

தானொரு கிங் மேக்கர் எனும் நட்டியின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. முழுப்படமும் அவரது பார்வையில் இருந்துதான் விரிகிறது. அவரது ‘ஆசை’ யார் ஆளவேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவனாகத் தான் இருக்கவேண்டும் என்பதுதான்.

அனுபவம் குறைந்த சீன ஜெனரலிடம் சிக்கிக் கொள்கிறது தமிழ்நாடு. தொலைத்தொடர்புக்கான இஸ்ரோவின் செயற்கைக்கோள் செயலிழந்ததும், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து விடுகிறார் சீன ஜெனரல். ஃபோன் வொர்க் ஆனால் பெரிய ஜெனரலிடம் பேசி அவர் சொல்வதைக் கேட்டு நடந்திர்ப்பார். பாவம் அவரது அனுபவமின்மை காரணமாக மொக்கையாக வீழ்த்தப்படுகிறார்.

கதை எனுமளவில் எழும் சுவாரசியம், திரைக்கதையாக மாற்றம் பெறத் தொடங்கும் பொழுதே அசுவாரசியம் தொடங்கிவிடுகிறது. இலைமறை, காய்மறையாக சில விஷயங்களைத் திரைக்கதையினூடே குறிப்பால் உணர்த்தலாம். ஆனால், சூப்பர் ஹீரோயிச ஆசையையும் தாண்டி, புனிதர், மீட்பர் என்ற ரேஞ்சிற்கு ஒரு பேராசை அப்பட்டமாய்த் தெரியுமளவு குழந்தை மனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது ஸ்க்ரிப்ட். புலியை எதிர்த்து அதனை ஓட விடுகிறார் நாயகன் தமிழ், அதனால் முதல்வர் மகள் கீர்த்தனாவிற்குத் தமிழ் மேல் காதல் வந்துவிடுகிறது, உச்ச நடிகர் ரிஷிகாந்த்தைக் கிண்டல் செய்கிறார், தலைநகர் சென்னை சீன ஆதிக்கத்தில் இருக்கும்பொழுது மசினக்குடியில் ஒரு குடியிருப்பை உருவாக்கி அதன் ஆதர்ச தலைவனாக விளங்குகிறார், அப்படியே சென்னைக்குச் சென்று தமிழ்நாட்டை மீட்கிறார், ரோபோவைச் சிங்கிள்ஸ்க்குக் கூப்பிடுகிறார். மன்னிக்கணும் ரோபோ இந்தப் படத்தின் கதை இல்லை. அடுத்த பாகத்திற்கான லீட். இந்தப் படத்தின் முடிவென்பது, ‘தமிழ்நாட்டுக்கு ஒரு புது கிங் கிடைச்சுட்டான்’ என கிங் மேக்கர் நட்டி சொல்வதோடு படம் சுபம்.

போர் நல்லதா, கெட்டதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்துள்ளார் வசனகர்த்தா ஆதி. போரின் கொடுமைகளைச் சொல்லும் வசனங்கள் ஒரு பக்கம், அதைத் தொடர்ந்து, “போருக்கு முன் நாமெல்லாம் சாதி, மதம், கட்சி எனப் பிரிந்திருந்தோம். இப்போ எவ்ளோ மகிழ்ச்சியாக இங்க ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கோம் இல்ல?” எனக் குடியிருப்பை விட்டு வெளியில் போகமுடியாமல் சிறைப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் புலிப்பாண்டி பெருமிதப்படுகிறார். அதாவது நாயகனின் தலைமையில் தேனாறும், பாலாறும், மகிழ்ச்சியாறும் குடியிருப்பில் ஓடுவதற்கான குறியீட்டு வசனம். எல்லாக் கதாபாத்திரங்களும் நாயகனைப் புகழ்ந்து கொண்டும், கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

திரைக்கதையில் கோட்டை விட்டிருந்தாலும், குருவி தலையில் பனங்காயைப் போன்ற ஒரு பெரிய சவாலான களத்தைத் தொட்டு, மேக்கிங்கில் அதீத கவனம் செலுத்தியுள்ள இயக்குநரும் இசையமைப்பாளருமான ஆதியின் செய்நேர்த்தி ஆச்சரியப்படுத்துகிறது.